மும்பை தமிழின இரயில் பயணிகள் நல சங்கத்தின் முதல் வெற்றி :-
மும்பை தமிழின இரயில் பயணிகள் நல சங்கத்தின் முயற்சியினால் விடப்பட்ட குர்லா - நெல்லை கோடை சிறப்பு இரயில் துவக்க விழா 01 மே 2011 அன்று வெகு விமரிசையாக ஆரம்பித்து மேள தளங்கள் முழங்க, வானவேடிக்கைகள் விண்ணை அதிரவைக்க சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பு இரயில் வழியனுப்பி வைக்கப்பட்டது.
சமீபத்தில் மத்திய ரயில்வேயில் இருந்து ஓய்வு பெற்ற இரயில் ஓட்டுநர்.டி.அப்பாத்துரை மும்பை தமிழர்களின் இரயில் கோரிக்கைகளுக்காக அமைப்பு ஓன்று தொடங்கி போராடினால் தான் இதற்க்கு விடிவு காலம் பிறக்கும் என நம்பி அதற்காக முதன் முதலில் ஜெரிமெரி கவுன்சிலர் எஸ்.அண்ணாமலையை தொடர்பு கொண்டு மும்பை தமிழின இரயில் பயணிகள் நலச்சங்கம் என்ற அமைப்பை தொடங்குவது என தீர்மானித்தார். அதன்படி சங்கம் தொடங்கப்பட்டது. தலைவராக எஸ்.அண்ணாமலையும், செயலாளராக டி.அப்பாத்துரையும், பொருளாளராக கே.வி.சாரங்கபாணியும், துணைத்தலைவர்களாக ஜெ.ராஜாஇளங்கோ, ஆர்.மகாலிங்கம், இணை செயலாளர்களாக ஏ.மாடசாமி, சயீத் முகைதீன் ஆகியோரும், நிர்வாககுழு மற்றும் ஆலோசகர்களில் முக்கிய பிரமுகர்கள் சேர்க்கப் பட்டனர்.
இந்த சங்கத்தைச் சேர்ந்த எஸ்.அண்ணாமலை மற்றும் டி.அப்பாதுரை, ஆகியோர் முப்பை தமிழர்களின் பல்வேறு இரயில் கோரிக்கைகளுக்காக புதுடெல்லி, சென்னை ஆகிய இடங்களுக்கு சென்று ரயில்வே உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்தும், தந்திகள் வாயிலாகவும், மனுகொடுத்தனர், அதோடு சி.எஸ்.டி.யில் உள்ள மத்திய உயர் அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்தனர்.
இதன் பலனாக கோடை விடுமுறை காலத்திற்காக குர்லாவிலிருந்து நெல்லைக்கு வாரம் ஒரு நாள் சனிக்கிழமை தோறும் ஒரு சிறப்பு ரயிலை இயக்க மத்திய ரயில்வே ஒப்புதல் வழங்கியது. இந்த இரயில் குர்லாவிலிருந்து சனிக்கிழமை பகல் 12 .50 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 2.15 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது. கோடை கல சிற்ப்பு இரயிலின் முதல் இரயில் 01 மே 2011 அன்று குர்லா டெர்மினசில் இருந்து புறப்பட்டது. சாதாரண பெட்டிகள் உள்ளிட்ட முன்பதிவு பெட்டிகள் அனைத்திலும் கூட்டம் நிரம்பி இருந்தது.
மும்பை தமிழின இரயில் பயணிகள் நலசங்கத்தின் சார்பில் முதல் இரயில் பயணம் செய்த தமிழர்களுக்கு வழியனுப்பு விழாவும், இரயில் பெற்று தந்த நலச்சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழாவினையும் 01 மே 2011 அன்று பகல் 12.00 மணியளவில் குர்லா இரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் சங்க நிர்வாகிகளுக்கு மாலை அணிவித்தனர். பெண்கள் சிறப்பு இரயில் என்ஜினுக்கு ஆரத்தி எடுத்தனர். இரயில் என்ஜின் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சங்கத்தினை சேர்ந்தவர்கள் இரயில் ஓட்டுனர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மாலைகள் அணிவித்தும் கவுரவித்தார்கள். பின்னர் இரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் மும்பை தமிழின இரயில் பயணிகள் நலசங்க நிர்வாகிகள் கொடியசைத்து ரயிலை துவக்கி வைத்தார்கள். இரயில் சரியாக 12.50 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இந்த முதல் வெற்றி மென்மேலும் வெற்றிகளை மும்பை தமிழின இரயில் பயணிகள் நல சங்கத்திற்கு பெற்றுத்தரும் என மும்பை தமிழன்.காம் தனது வாழ்த்துகளை தெரிவிக்கின்றது. இதனைப்போல் தமிழர் அனைவரும் ஒன்றிணைந்து நமது குறைகள் தீர பாடுபட வேண்டும் என்று தமிழ் நெஞ்சங்களை வேண்டுகிறது.
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.- நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே" என்பதனின் மனதில் கொள்வோம்.
நன்றி.
மும்பை தமிழன்.காம்
No comments:
Post a Comment