முஹர்ரம்

முஹர்ரம்

இப்பூமியில் வாழக்கூடிய மக்கள் காலத்தை கணக்கிடுவதற்கு பல்வேறு மாதங்களையும் நாட்களையும் உண்டாக்கி வைத்துள்ளனர்.
ஜனவரியை துவக்கமாக கொண்ட ஆங்கில வருடபிறப்பு, சித்திரையை துவக்கமாக கொண்ட தமிழ்வருட பிறப்பு போன்று பலவருடபிறப்புகள் நடைமுறையில் உள்ளன.
நபி(ஸல்) அவர்களது ஹிஜ்ரத்தை அடிப்படையாக கொண்டு இஸ்லாமிய ஆண்டுகள் கணக்கிடப்படுகின்றன. அனைவரிடத்திலும் ஓராண்டுக்கு 12 மாதங்கள் என்ற அளவிலேயே கணக்கிடப்படுகின்றன.
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவு) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 9:36)
எனவே ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் என்பது மனிதன் கண்டுபிடித்ததல்ல. இந்த உலகை படைக்கும்போதே இறைவன் வரையறுத்துவிட்டான் என்பதையே மேற்படி இறைவசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம் ஆகும். முஹர்ரம் என்பதற்கு ஆரம்பகாலம் முதல் அரேபியர்கள் முஹர்ரம் மாதத்தை புனித மாதங்களில் ஒன்றாகவே கருதி வந்தனர். முஹர்ரம் என்ற சொல்லுக்கு ‘விலக்கப்பட்டது’ என்றொரு பொருளும் உண்டு.
முஹர்ரம் – ஹராம், ஹரம், ஹுரும், தஹ்ரீம், இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர் சொல்லிருந்து பிறந்ததாகும்.
பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது, என்றும் புனிதம் காத்தல் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
உதாரணமாக தொழுகைக்கு முன் செளிணியப்படும் செயல்கள் தொழுகையில் தடுக்கப்படுவதால் ‘தக்பீர் தஹ்ரீம்’ என்றும் உம்ரா, ஹஜ்ஜுக்கு முன் அனுமதிக்கப்படுபவை இஹ்ராமுக்கு நிய்யத் செய்ததும் தடுக்கப்படுவதால் இஹ்ராம் என்றும் ஹரம் எல்லைக்கு வெளியே செய்யப்படும் விலக்கப்பட்டவை ஹரம் எல்லைக்குள் தடுக்கப்படுவதால் ஹரம் (புனித எல்லை) என்றும் மஸ்ஜிதுல் ஹராம் புனிதமான பள்ளிவாசல் என்றும் சொல்லப்படுகிறது.
முஹர்ரம் மாதத்தில் ஆஷுரா என்றழைக்கப்படும் சிறப்பான ஓருநாள் உண்டு. ஆம்! அது முஹர்ரம் 10ம் நாளாகும். ‘நானே கடவுள்’ என்று கூறிய ஆணவக்கார ஃபிர்அவ்னிடமிருந்து இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களையும் அவர்களை பின்பற்றியோரையும் அல்லாஹ் தனது வல்லமையால் காப்பாற்றிய நாள். ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தாரையும் கடலில் மூழ்கடித்த நாள். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா (பத்தாம்) தினத்தன்று நோன்பு நோற்றிருந்ததை கண்டார்கள். அவர்களை நோக்கி ‘நீங்கள் இன்று நோன்பு நோற்பதின் நோக்கம் என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு யூதர்களோ, இன்றைய நாளில்தான் இறைவன் நபி மூஸா(அலை) அவர்களை ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தாரையும் கடலில் மூழ்கடிக்கச் செய்தான். அதற்கு நன்றி செலுத்துவதற்காக நபி மூஸா (அலை) அன்றைய தினம் நோன்பிருந்தார்கள். எனவே நாங்களும் நோன்பிருக்கிறோம் என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நபிமூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் (முஸ்லிம்களாகிய) நாங்கள்தான் (யூதர்களான) உங்களைவிட தகுதியானவர்கள் என்று கூறி அந்த நாளில் நோன்பு நோற்றார்கள். மேலும் அனைவரையும் நோன்பு நோற்குமாறும் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) வந்தபோது ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும். விரும்பியவர்கள் விட்டுவிடட்டும் எனக்கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா(ரலி), ஆயிஷா(ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத். ரமலானுக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதம் நோன்பாகும். கடமையான தொழுகைக்கு பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்.
யூதர்களின் வழிமுறைக்கு மாற்றமாக ஆஷ§ரா நாளுக்கு முந்தைய தினமான 9ம் நாளும் நோன்பு நோற்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இனிவரும் காலங்களில் நான் உயிருடனிருந்தால் முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்கள் நான் நோன்பு நோற்பேன்’ என நபி(ஸல்) கூறினார்கள். நூற்கள்: புகாரி, முஸ்லிம். ஆனால் நபி(ஸல்) அவர்கள் அடுத்தவருடம் உயிருடன் இல்லை. அந்த வருடமே மரணித்து விட்டார்கள். ‘ஆஷுரா நோன்பு நோற்பதால் எதிர் வரும் வருடத்தின் பாவங்களுக்கு அது பரிகாரமாகும்’ என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: முஸ்லிம்.
ஆகவே நாம் முஹ்ரம் 9ம், 10ம் நோன்பு நோற்போம்.

ஆஷுராவும் கர்பலாவும்

முஹ்ர்ரம் 10ம் நாள்தான் நபி(ஸல்) அவர்களின் பேரன் ஹுசைன்(ரலி) அவர்கள் கொல்லப்பட்ட சோகச்சம்பவமான கர்பலா நிகழ்ச்சி நடைபெற்றது. நபி(ஸல்) அவர்கள் மரணித்து கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு கலீஃபாவாக யஜீது பொருப்பேற்கிறார். அப்போது யஜீதுக்கும் ஹுசைனுக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் போரில் ஹுசைன் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 63ல் கொல்லப்படுகிறார்கள்.
இதனை அடிப்படையாகக் கொண்டு சிலர் ஹுசைன்(ரலி) அவர்களின் மரணத்தை நினைவு படுத்தி ஒப்பாரி வைப்பது, மாரடித்துகொள்வது, பஞ்சா எடுப்பது, தீமிப்பது, ஊர்வலங்கள் நடத்துவது, ஹுசைன் மவ்லிது ஓதுவது என தேவையற்ற மார்க்கத்திற்கே முரணான பற்பல அனாச்சாரங்களை செய்து வருகின்றனர்.
கன்னத்தில் அறைந்து கொண்டும், சட்டையை கிழித்து கொண்டும் அறியாமைகாலத்து (ஒப்பாரி) க் கூப்பாடு போடுபவன் நம்மை சார்ந்தவனில்லை என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ.
சிலர் இம்மாதத்தை பீடை மாதமென்று நினைத்து இம்மாதத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை செய்வது கிடையாது, தாம்பத்திய உறவில் ஈடுபடுவது கிடையாது. இம்மாதத்தில் உருவாகும் குழந்தைகள் ஹுசைன்(ரலி) போல இரத்த காயம்பட்டு சாகும் என்ற மூட நம்பிக்கையில் உள்ளனர். அதற்காகவே தலை, கை போன்ற வடிவங்களில் கொழுக்கட்டை செய்து பாத்திஹா ஓதுவது, பித்தளை, இரும்புபோன்ற உலோகங்களில் தலை, கை போன்ற வடிவங்களை அமைத்து கொண்டு பஞ்சா என்று தூக்கிகொண்டு ஊர்வலம் வருவது, தீ குண்டங்களை மாற்று மதத்தவர்கள் போல உண்டாக்கி தீ மிதிப்பது போன்ற தேவையற்ற, மார்க்கத்திற்கு முரணான, அல்லாஹ்வின் கோபத்திற்குரிய காரியங்களை செய்து வருகின்றனர். இவைகள் யாவும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவைகளே.
முஹர்ரம் மாதத்தில் ஹிஜ்ரத்தை நினைவு கூர்ந்து, 9 மற்றும் 10ம் நாட்களில் ஆஷுரா நோன்பை நோற்று பாவங்கள் மன்னிக்கப்பட வாய்ப்பாய் அதனை பயன்படுத்து கொள்வோமாக!
- அபுஅதீ & மெளலவி யூசுப்.எஸ்.பி
http://www.samuthayaotrumai.com/?p=412  வலைதளத்திலிருந்து 

சர் சந்திரசேகர வெங்கட ராமன் (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970)

ச. வெ. இராமன்
Chandrasekhara Venkata Raman.jpgசர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்
சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராப்பளியில் பிறந்தார்.இராமன் அவர்கள் சென்னையிலே உள்ள பிரெசிடென்சிக் கல்லூரியில் 1902ஆம் ஆண்டு நுழைந்து 1904ல் கலை இளநிலை (‘பி.ஏ) பட்டம் பெற்றார். கல்லூரியில் முதலாவதாக நின்று தங்கப் பதக்கம் பெற்றார். அப்பொழுது அவருக்கு, பிறந்து 16 ஆண்டுகள் தான் (அகவை 16) நிறைந்திருந்தது. பின்னர் 1907ல் இவர் முதுகலை பட்டமும் பெற்றார். அதிலும் இவர் உச்சச் சிறப்புகளோடு பெற்றார்.
முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.

வாழ்க்கை
சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைகழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார். இவர் நவம்பர் 21, 1970ல் இவ்வுலகில் இருந்து பிரிந்தார்.

அறிவியலுக்கு இவருடைய ஆக்கப்பணிகள்
சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.

அறிவியல் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும்
இந்திய இயற்பியல் ஆய்விதழில் (Indian J. Physics) இவர் ‘வெ’ப்ருவரி 28, 1928 ல் ஒரு புதிய ஒளிர்ப்பாடு (கதிர்வீச்சு) A new Radiation என்னும் தலைப்பில் தம் ஆய்வுக்கண்டுபிடிபுகளின் முடிவுகளை வெளியிட்டார். இப்புது அறிவியல் ஒளி விளைவுதான் இவருக்கு நோபல் பரிசு பெறவும் தன் பெயரால் ஒரு அறிவியல் விளைவு பெயர் பெறவும் வழி வகுத்தது. இந்திய ஆய்விதழில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வயலின் (பிடில்) , மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார். பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார். இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்புக்கள்
  • இவருக்கு லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
  • பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் "நைட் ஹீட்" எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
  • 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது.
  • இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான "மேட்யூச்சி" பதக்கம் வழங்கப்பட்டது.
  • மைசூர் அரசர் "ராஜ்சபாபூசன்" பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் வழங்கினார்.
  • பிலிடெல்பியா நிறுவனத்தின் "பிராங்க்ளின்" பதக்கம் 1941 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
  • இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.
  • 1957 ஆம் ஆண்டில் அகில "உலக லெனின் பரிசு" அளிக்கப்பட்டது.

பேராசிரியர் சி. இலக்குவனார் (நவம்பர் 17, 1909- செப்டம்பர் 3, 1973)

சி. இலக்குவனார்
பேராசிரியர் சி. இலக்குவனார் (நவம்பர் 17, 1909- செப்டம்பர் 3, 1973) தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார்.
வாழ்க்கைச் சுருக்கம்
திருவள்ளுவராண்டு 1930, கார்த்திகைத் திங்கள், முதல் நாள் (ஆங்கில ஆண்டு 1909 நவம்பர் 17ம் நாள்) தமிழ்நாட்டின் அன்றைய தஞ்சாவூர் மாவட்டம் (இன்றைய நாகப்பட்டிணம் மாவட்டம்), திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மைமேடு என்னும் சிற்றூரில், சிங்காரவேலர்-இரத்தினத்தாச்சி ஆகியோருக்கு இரண்டாம் புதல்வராகப் பிறந்தார். தமது நான்கு வயதிலேயே தந்தையை இழந்தார். குறுநிலக்கிழாராகவும் ஒரு மளிகைக்கடை உரிமையாளராகவும் விளங்கிய இவரது தந்தையார் மறைவுக்குப் பின் திண்ணைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்த இலக்குவனாரின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டது. தமது அண்ணன் நல்லபெருமாளுக்கு உதவியாக வயல்வேலைகளைக் கவனிப்பதும் மாடுகளை மேய்ப்பதுமே அவரது வேலையாயிற்று. தன் பிள்ளை படிக்கவேண்டும் என்று அவரது தாயார் விழைந்தமையால் இராசாமடம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களில் நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளிகளில் பயின்று தமது ஆசிரியர்களின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றார். இவர் எட்டாம் வகுப்புப் படித்தபொழுது இலட்சுமணன் என இவரது பெற்றோர் இட்ட பெயரை, இவரது தமிழாசிரியர் சாமி சிதம்பரனார், "இலக்குவன்" என மாற்றச் செய்தார். அப்பொழுது முதலே தனித்தமிழ் மீது நாட்டமும் தமிழில் பிறமொழிக்கலப்பைத் தவிர்க்கும் முனைப்பும் இலக்குவனார்க்கு ஏற்பட்டது.

ஆசிரியப் பணி
திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றபின், தஞ்சை மாவட்ட நாட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியப் பணிபுரிந்தார்.
கலைஞர் மு. கருணாநிதி திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்புப் பயின்றபோது அவரது ஆசிரியராகத் திகழ்ந்தவர். தமக்குத் தமிழுணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் ஊட்டியவர்' என்று இவரைப் பற்றித் தமது தன்வரலாற்று நூலாகிய 'நெஞ்சுக்கு நீதி'யில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார். அதன்பின்னர் திருவையாறு அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த இலக்குவனார், அன்றைய சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவராகிய செ.தெ.நாயகம், குலசேகரன்பட்டினத்தில் தொடங்கிய தமிழ்க்கல்லூரியில் முதல்வராகப் பணியமர்த்தம் பெற்றார். பின்னர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், 1947-இல் விருதுநகரில் தொடங்கப்பெற்ற வி.இ.செந்திற்குமாரநாடார் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகவும் பணிபுரிந்தார். ஈரோடு காசனக்கல்லூரி, நாகர்கோயில் தெ.தி. இந்துக்கல்லூரி, மதுரை தியாகராசர் கலைக்கல்லூரி என இவர் பணியாற்றிய கல்லூரிகளின் பட்டியல் பெரிதாகும். இவரது அஞ்சாநெஞ்சமும், தன்மான உணர்வும் எவ்விடத்தும் இவர் தொடர்ந்து பணிபுரிய இடமளிக்கவில்லை. மாணவரிடையே தமிழுணர்வை இவர் ஊட்டியமை, இவர் மாணவர்களைப் புரட்சிக்குத் தூண்டுவதாகக் கல்லூரிப் பொறுப்பாளர்களைக் கருதச் செய்தது.
1944-இல் இவர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இவரிடம் தமிழ் பயின்ற, இன்றைய இந்தியப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர்களில் ஒருவராகிய தோழர் நல்லகண்ணு இவரது அஞ்சாநெஞ்சத்தையும் தமிழுணர்வையும் சிறப்பாகப் பாராட்டுகிறார். அன்றைய தமிழ் வகுப்புகளில் வருகைப்பதிவை ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றி உளேன் ஐயா எனக் கூறவைத்தவரும் பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படவும் காரணமாக இருந்தவர் இலக்குவனாரே என நல்லுகண்ணு அவர்கள் கூறுகிறார்.

முனைவர் பட்டம்
காலப்போக்கில் பி.ஓ.எல்.எம்.ஏ. ஆகிய பட்டங்களைத் தனித்தேர்வராகப் பயின்று பெற்ற இலக்குவனார், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, விரிவாக ஆய்வும் நிகழ்த்தித் தமது முனைவர் பட்டப்பேற்றிற்கான ஆய்வேட்டை அளித்தார். 1963-இல் முனைவர் பட்டம் பெற்றார். தமது பல்வேறு பணிகளின் காரணமாகவும், பணியிழப்புகளின் காரணமாகவும் காலந்தாழ்த்து 53 அகவையில் இப்பட்டத்தை இவர் பெற்றாலும் தமிழ்நெஞ்சங்கள் மகிழ்ந்துபோற்றின. குமரி முதல் சென்னை வரை இவருக்குத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்தன. ஒரு பேராசிரியர் முனைவர் பட்டம் பெற்றமைக்காகத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்த நிகழ்வு இதற்கு முன்புமில்லை:பின்புமில்லை. இவரது தொல்காப்பிய ஆங்கில நூலுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் அணிந்துரை வழங்கிப் பாராட்டியுள்ளார். பின்னர் அண்ணா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றபோது, தமது அயல்நாட்டுச் சுற்றுப்பயணத்தில், இந்நூலைப் போப் ஆண்டவர் அவர்களுக்கும், அமெரிக்க நூகலகங்களுக்கும் தமிழக அரசின் சார்பில் அன்பளிப்பாக அண்ணா வழங்கினார்.

இதழ்கள் வெளியிடல்
இலக்குவனார் தாம் பணியாற்றச் சென்ற இடமெல்லாம் தமிழ்மன்றங்களை நிறுவியும் இதழ்களை நடத்தியும் மக்கள் மனத்தில் தமிழ் எழுச்சியும் ஆர்வமும் ஏற்படப் பாடுபட்டார். 1944 முதல் 1947 வரை இவர் நடத்திய "சங்க இலக்கியம்" வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டுவந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது. சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம் செய்த இலக்குவனாரின் முயற்சியே பின்னாளில் மு. வரதராசன், மு. கருணாநிதி ஆகியோரின் முயற்சிகளுக்கு முன்னோடி என்பது வரலாறு.
விருதுநகரில் இருந்தபோது இலக்கியம் (மாதமிருமுறை), தஞ்சாவூரில் இருந்தபோது திராவிடக்கூட்டரசு மதுரையிலிருந்த போது குறள்நெறி எனப் பல்வேறு இதழ்களை நடத்தினார். 1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இருமுறை கைது செய்யப்பட்டு சிறைவாழ்வும் பணிநீக்கமும் பெற்ற இலக்குவனார், 1965 மே முதல் திசம்பர் வரை ஏழு மாதங்கள் தமது ஏட்டை நாளிதழாகவும் நடத்தினார். விற்பனையாளர்கள் உரியமுறையில் பணம் கொடுக்காத ஒரே காரணத்தாலேயே இவ்விதழ் நிறுத்தப்பட்டது.

இறுதிக் காலம்
1967-இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் அறிஞர் அண்ணா அவர்களால், மீண்டும் இலக்குவனார் பணிபுரியும் வாய்ப்பைப்பெற்றார். சென்னை மாநிலக்கல்லூரியில் தலைமைத் தமிழ்ப்பேராசிரியராகப் பணியேற்ற இவரால் ஓராண்டுக்கு மேல் அப்பணியிலும் நீடிக்கமுடியவில்லை. அன்றைய கல்வியமைச்சரிடம் தமிழைப் பயிற்சிமொழியாக்குமாறும் ஆங்கிலத்துக்குச் சார்பாக நடக்கவேண்டாமெனவும் இவர் கூறியமையே இவரது வேலைக்கு உலைவைத்த செய்தி தமிழ்நாடு அறிந்த ஒன்றே. அதன்பின்னர் ஐதராபாது உசுமானியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இரண்டாண்டுகள் பணியாற்றியபின்னர் தமது நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க நகர்கோயில் இந்துக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து 1970 திசம்பரில் ஓய்வு பெற்றார். மீண்டும் குறள்நெறி இதழைத் தொடங்கி நடத்தியும் நாடெங்கும் சென்று சொற்பொழிவாற்றியும் தமது தமிழ்ப்பணியைத் தொடர்ந்த இலக்குவனார் நீரிழிவு நோய் காரணமாக 1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் காலமானார்.

நூற்றாண்டு விழா
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையினரால் 26 நவம்பர் 2009 அன்று தமிழறிஞர் சி.இலக்குவனாருக்கு எடுக்கப்பட்ட நூற்றாண்டு விழாவில் சிறப்புக் கருத்தரங்கம், கவியரங்கம் ஆகியவை நடத்தப்பட்டன; தமிழகத்தின் நிதியமைச்சரான பேராசிரியர் க.அன்பழகன் சிறப்பித்த, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஒளவை நடராசன் தலைமையேற்ற இந்த விழாவில் பேசப்பட்ட இலக்குவனாரின் நற்பணிகளின் விபரம்:
  • இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வும் மொழிபெயர்ப்பும்
  • இலக்குவனாரின் சங்க இலக்கிய ஆய்வு
  • இலக்குவனாரின் குரளுரையும் குரள் பரப்புப் பணியும்
  • இலக்குவனாரின் கவிதைப் படைப்புகள்
  • இலக்குவனாரின் இதழியற்பணி
  • இலக்குவனாரின் தமிழ் வளர்ச்சிப் பணிகள்.