சி. இலக்குவனார்
வாழ்க்கைச் சுருக்கம்
திருவள்ளுவராண்டு 1930, கார்த்திகைத் திங்கள், முதல் நாள் (ஆங்கில ஆண்டு 1909 நவம்பர் 17ம் நாள்) தமிழ்நாட்டின் அன்றைய தஞ்சாவூர் மாவட்டம் (இன்றைய நாகப்பட்டிணம் மாவட்டம்), திருத்துறைப்பூண்டிக்கு
அருகில், வாய்மைமேடு என்னும் சிற்றூரில், சிங்காரவேலர்-இரத்தினத்தாச்சி
ஆகியோருக்கு இரண்டாம் புதல்வராகப் பிறந்தார். தமது நான்கு வயதிலேயே தந்தையை
இழந்தார். குறுநிலக்கிழாராகவும் ஒரு மளிகைக்கடை உரிமையாளராகவும் விளங்கிய
இவரது தந்தையார் மறைவுக்குப் பின் திண்ணைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை
படித்திருந்த இலக்குவனாரின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டது. தமது அண்ணன்
நல்லபெருமாளுக்கு உதவியாக வயல்வேலைகளைக் கவனிப்பதும் மாடுகளை மேய்ப்பதுமே
அவரது வேலையாயிற்று. தன் பிள்ளை படிக்கவேண்டும் என்று அவரது தாயார்
விழைந்தமையால் இராசாமடம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களில் நாட்டாண்மைக்கழக
உயர்நிலைப்பள்ளிகளில் பயின்று தமது ஆசிரியர்களின் நன்மதிப்பையும்
பாராட்டையும் பெற்றார். இவர் எட்டாம் வகுப்புப் படித்தபொழுது இலட்சுமணன் என
இவரது பெற்றோர் இட்ட பெயரை, இவரது தமிழாசிரியர் சாமி சிதம்பரனார்,
"இலக்குவன்" என மாற்றச் செய்தார். அப்பொழுது முதலே தனித்தமிழ் மீது
நாட்டமும் தமிழில் பிறமொழிக்கலப்பைத் தவிர்க்கும் முனைப்பும்
இலக்குவனார்க்கு ஏற்பட்டது.
ஆசிரியப் பணி
திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றபின், தஞ்சை மாவட்ட
நாட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியப் பணிபுரிந்தார்.
1944-இல்
இவர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பணிபுரிந்து
கொண்டிருந்தபோது இவரிடம் தமிழ் பயின்ற, இன்றைய இந்தியப் பொதுவுடைமைக்
கட்சித்தலைவர்களில் ஒருவராகிய தோழர் நல்லகண்ணு இவரது அஞ்சாநெஞ்சத்தையும்
தமிழுணர்வையும் சிறப்பாகப் பாராட்டுகிறார். அன்றைய தமிழ் வகுப்புகளில்
வருகைப்பதிவை ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றி உளேன் ஐயா
எனக் கூறவைத்தவரும் பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படவும்
காரணமாக இருந்தவர் இலக்குவனாரே என நல்லுகண்ணு அவர்கள் கூறுகிறார்.
முனைவர் பட்டம்
காலப்போக்கில் பி.ஓ.எல்.எம்.ஏ. ஆகிய பட்டங்களைத் தனித்தேர்வராகப்
பயின்று பெற்ற இலக்குவனார், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக்
கொண்டிருந்தபோது, தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, விரிவாக ஆய்வும் நிகழ்த்தித் தமது முனைவர் பட்டப்பேற்றிற்கான ஆய்வேட்டை அளித்தார். 1963-இல்
முனைவர் பட்டம் பெற்றார். தமது பல்வேறு பணிகளின் காரணமாகவும்,
பணியிழப்புகளின் காரணமாகவும் காலந்தாழ்த்து 53 அகவையில் இப்பட்டத்தை இவர்
பெற்றாலும் தமிழ்நெஞ்சங்கள் மகிழ்ந்துபோற்றின. குமரி முதல் சென்னை
வரை இவருக்குத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்தன. ஒரு
பேராசிரியர் முனைவர் பட்டம் பெற்றமைக்காகத் தமிழ்நாடெங்கும்
பாராட்டுவிழாக்கள் நடந்த நிகழ்வு இதற்கு முன்புமில்லை:பின்புமில்லை. இவரது
தொல்காப்பிய ஆங்கில நூலுக்கு அறிஞர் அண்ணா
அவர்கள் அணிந்துரை வழங்கிப் பாராட்டியுள்ளார். பின்னர் அண்ணா தமிழக
முதல்வராகப் பொறுப்பேற்றபோது, தமது அயல்நாட்டுச் சுற்றுப்பயணத்தில்,
இந்நூலைப் போப் ஆண்டவர் அவர்களுக்கும், அமெரிக்க நூகலகங்களுக்கும் தமிழக
அரசின் சார்பில் அன்பளிப்பாக அண்ணா வழங்கினார்.
இதழ்கள் வெளியிடல்
இலக்குவனார் தாம் பணியாற்றச் சென்ற இடமெல்லாம் தமிழ்மன்றங்களை நிறுவியும் இதழ்களை நடத்தியும் மக்கள் மனத்தில் தமிழ் எழுச்சியும் ஆர்வமும் ஏற்படப் பாடுபட்டார். 1944 முதல் 1947
வரை இவர் நடத்திய "சங்க இலக்கியம்" வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக்
கருதப்பட்டுவந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது. சிறுகதை
வடிவிலும் ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம் செய்த
இலக்குவனாரின் முயற்சியே பின்னாளில் மு. வரதராசன், மு. கருணாநிதி ஆகியோரின் முயற்சிகளுக்கு முன்னோடி என்பது வரலாறு.
விருதுநகரில் இருந்தபோது இலக்கியம் (மாதமிருமுறை), தஞ்சாவூரில் இருந்தபோது திராவிடக்கூட்டரசு மதுரையிலிருந்த போது குறள்நெறி எனப் பல்வேறு இதழ்களை நடத்தினார். 1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இருமுறை கைது செய்யப்பட்டு சிறைவாழ்வும் பணிநீக்கமும் பெற்ற இலக்குவனார், 1965
மே முதல் திசம்பர் வரை ஏழு மாதங்கள் தமது ஏட்டை நாளிதழாகவும் நடத்தினார்.
விற்பனையாளர்கள் உரியமுறையில் பணம் கொடுக்காத ஒரே காரணத்தாலேயே இவ்விதழ்
நிறுத்தப்பட்டது.
இறுதிக் காலம்
1967-இல் தி.மு.க.
ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் அறிஞர் அண்ணா அவர்களால், மீண்டும் இலக்குவனார்
பணிபுரியும் வாய்ப்பைப்பெற்றார். சென்னை மாநிலக்கல்லூரியில் தலைமைத்
தமிழ்ப்பேராசிரியராகப் பணியேற்ற இவரால் ஓராண்டுக்கு மேல் அப்பணியிலும்
நீடிக்கமுடியவில்லை. அன்றைய கல்வியமைச்சரிடம் தமிழைப்
பயிற்சிமொழியாக்குமாறும் ஆங்கிலத்துக்குச் சார்பாக நடக்கவேண்டாமெனவும் இவர்
கூறியமையே இவரது வேலைக்கு உலைவைத்த செய்தி தமிழ்நாடு அறிந்த ஒன்றே.
அதன்பின்னர் ஐதராபாது உசுமானியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக
இரண்டாண்டுகள் பணியாற்றியபின்னர் தமது நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க
நகர்கோயில் இந்துக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து 1970 திசம்பரில் ஓய்வு பெற்றார். மீண்டும் குறள்நெறி இதழைத் தொடங்கி நடத்தியும் நாடெங்கும் சென்று சொற்பொழிவாற்றியும் தமது தமிழ்ப்பணியைத் தொடர்ந்த இலக்குவனார் நீரிழிவு நோய் காரணமாக 1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் காலமானார்.
நூற்றாண்டு விழா
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையினரால் 26 நவம்பர் 2009
அன்று தமிழறிஞர் சி.இலக்குவனாருக்கு எடுக்கப்பட்ட நூற்றாண்டு விழாவில்
சிறப்புக் கருத்தரங்கம், கவியரங்கம் ஆகியவை நடத்தப்பட்டன; தமிழகத்தின்
நிதியமைச்சரான பேராசிரியர் க.அன்பழகன் சிறப்பித்த, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஒளவை நடராசன் தலைமையேற்ற இந்த விழாவில் பேசப்பட்ட இலக்குவனாரின் நற்பணிகளின் விபரம்:
No comments:
Post a Comment