Dasara

தசரா
                 தசம் என்றால் பத்து தசரா என்றால் பத்து நாள்கள் கொண்டாடக்கூடிய விழா. இவ்விழாபுரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது. பொதுவாகப் புரட்டாசி மாதம் பெண் தெய்வங்களின் வழிபாட்டுக்குரிய மாதமாகும். ஐப்பசி அஷ்டமி துர்காஷ்டமியாகவும், நவமி ஆ யுத பூஜையாகவும், தசமி விஜயதசமியாகவும், ஐப்பசி மாத அமாவாசை தீபாவளிப் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.
வளர்பிறை திதியில் இந்த அஷ்டமி, நவமி, தசமி மூன்றும் முக்கியமானவை. இந்த சமயத்தில்
10 நாட்களுக்கு தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் கொண்டாடப்படுகிற
இப் பண்டிகையின் கடைசி மூன்று நாள்கள் அதாவது அஷ்டமி, நவமி, தசமி மிக மிக முக்கிய நாட்களாகும்.

அஷ்டம் என்றால் எட்டு. துர்க்காய அஷ்டமி என்றால் துர்க்கை அம்மனை வழிபடுகிறவர்கள் துர்காய
அஷ்டமி அன்று துர்க்கை அம்மன் எல்லாவிதமான தீய சக்திகளையும் அழிப்பதாக நம்புகிறார்கள்.

நவமி. நவம் என்றால் ஒன்பது. எல்லாவிதமான தொழிற்கருவிகளுக்கும், ஆயுதங்களுக்கும் உகந்த நாள் என்பதால் அன்று ஆ யுதங்களைக் கடவுள் முன் வைத்துப் பூஜை செய்து யுத பூஜையாகக் கொண்டாடப்படுகிறது.

தசமி. தசம் என்றால் பத்து. இது விஜயதசமி அதாவது வளர்பிறை தசமி இது பலவித வெற்றிகளைத்
தரக்கூடிய நாளாகும். பொதுவாக அஷ்டமி, நவமி, தசமியில் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு யோசிப்பவர்கள் இந்த ஐப்பசி மாதம் வளர்பிறை நாள்களில் வரும் இந்த மூன்று நாள்களை மட்டும்
சிறந்த நாளாகக் கருதுகிறார்கள். இந்த பத்தாம் நாளான தசமி அன்று எல்லாவிதமான பெண் தெய்வங்களின் அம்சங்கள் அனைத்தும் ஒன்றுகூடி ஒரே அம்பாளாகக் காட்சி அளிக்கிறது. இந்த நாள் சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளை வியாபாரம் தொடங்குவதற்கும், அலுவலகங்களில் புதுக்கணக்கு தொடங்குவதற்கும் உகந்ததாகக் கருதுகிறார்கள். இந்தப் பத்தாவது நாள் விழா அகில இந்திய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இதில் கல்கத்தாவில் காளிகோவில் வழிபாடு மிக மிக விசேஷம். இங்கு அஷ்டமி, நவமி, தசமி
இவைகளுக்கு ஏழு நாள்களுக்கு முன்னதாகவே இவ்விழா ஆ ரம்பித்து விடுகிறது. இருப்பினும்
இந்தக் கடைசி மூன்று நாள்களும் முக்கியமான நாள்களாகும். மூன்று நாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு பெரிய பெரிய பந்தல்கள், தோரணங்கள், வாணவேடிக்கைகள், அம்மன் புறப்பாடு , இரவு கச்சேரி என்று கோலாகாலமாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும், வங்காளம்தேசம், மைசூரிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இதில் மைசூரில் மிக சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். மைசூர் மகராஜாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் பத்து நாள்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு பத்து நாள்களுமே அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு, மஹாராஜாவே முன்னின்று நடத்துவதால் மக்கள் கூட்டம் பெரிய அளவில் கூடி அம்மன் புறப்பாடு , கச்சேரி, ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாடி மகிழ்கிறார்கள்.

ஒரு காலத்தில் மைசூருக்கு இணையாகத் தமிழ்நாட்டில் உள்ள பாளையங்கோட்டையிலும் அதனருகில் உள்ள குணசேகரப்பட்டினத்திலும் புகழ்பெற்ற விழாவாக, லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மகிழ்கிற விழாவாகக் கொண்டாடப்பட்டது. தற்போது, அதன் வேகம் குறைந்து சாதாரண ஆ யுத பூஜையாகவே கொண்டாடப்படுகிறது.

தேவிக்கு மிகவும் விருப்பமானது நவராத்திரிப் பெருவிழா ஒன்றுதான். இவ்விழா வழிபாட்டில் அனைத்துமே தேவி மயம்தான். அன்னையானவள் எல்லா உயிர்களிடத்திலும் அன்பும், கருணையும் உடையவள். இதை உலகுக்கு உணர்த்தவே இந்த நவராத்திரி வழிபாடு.

இந்த வழிபாட்டினை சிலர் ஒன்பது நாளும் பகல் நேரத்தில் செய்வார்கள். வேறு சிலரோ இரவு
நேரங்களில் மட்டும் அன்னையைப் பூஜிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் சாரதா நவராத்திரி மிக விசேஷமானது. நவராத்திரி ஒன்பது நாட்களும் பகலில் தேவி பாகவதத்தினைப் பாராயணம் செய்தல் நல்லது. மாலையில் விளக்கேற்றி வைத்து அம்மனைக் குறித்த பாடல்கள் பாடுவதும் நன்மையை உண்டாக்கும்.

நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான கலவை சாதம், ஒன்பது விதமான பூ வகைகள், ஒன்பது வித பட்சணங்கள், ஒன்பது கன்னிப் பெண்களுக்கு மங்கல திரவியங்கள், ஆடை, அணிமணிகள் கொடுப்பதும் கூட வழக்கம்தான்.

அன்னைக்கு உகந்த பழங்கள்:

மா, பலா, வாழை, கொய்யா, நாவல், நாரணம், மாதுளை, பேரீச்சை, இளநீர் போன்றவை

நிவேதனப் பொருள்கள்:

சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், வெண்பொங்கல், பலவிதமான காய்கறிகளுடன் கூடிய
சாம்பார்சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை ஆ கியவை.


விசேஷமான சக்தி பீடங்கள் 9

பார்வதியின் தந்தை தட்சன் நடத்திய யாகத்துக்கு சிவனை அழைக்கவில்லை. அவனுக்குத் தர வேண்டிய அவிர் பாகத்தையும் தரவில்லை என்பதால் கோபம் கொண்ட பார்வதி, கணவனின் சொல்லை மீறி தட்சன் யாகம் நடத்தும் இடத்துக்கு நியாயம் கேட்கச் செல்லுகிறாள். தட்சனோ மகளென்றும் பாராமல் பார்வதியை அவமதிக்கிறான். அதனால், வெகுண்ட பார்வதி, யாக குண்டத்தில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.

உக்கிர மூர்த்தியான சிவனோ, இறந்து போன சதி பார்வதியின் உடலை எடுத்துக் கொண்டு
மூவுலகங்களையும் அதி உக்கிரத்துடன் ஆ டச் செய்தார். அந்த நேரத்தில் மகா விஷ்ணு, கோபத்தின் வயப்பட்டு ஆ டும் சிவபெருமானின் கரங்களிலிருந்த பார்வதிதேவியின் சவத்தைத் தன் சக்ராயுதத்தால் பல துண்டங்களாக்கி பல திசைகளிலும் வீசி எறிந்தார்.

அவ்விதமாக உடலின் துண்டுகள் விழுந்த இடங்களை சக்தி பீடங்கள் என்கிறோம்.
சக்தி பீடங்கள் மொத்தம் 51.

அவற்றுள் முக்கியமானவை ஒன்பது.

1. ஸ்ரீ நைனா தேவி - இமயமலைப் பகுதியில் சதியின் இரு கண்கள் விழுந்த இடம்.

2. ஸ்ரீ சிந்த்த பூர்ணா தேவி - பாதங்களின் சில பாகங்கள் விழுந்த இடம்.

3. ஸ்ரீ ஜ்வாலாமுகி - நாக்கு விழுந்த இடம். ஜ்வாலாமுகி சன்னிதியில் அம்மனுக்கு விக்ரகம் எதுவும் கிடையாது.
இங்கு ஜோதி வடிவாக அம்பாள் காட்சி தருகிறாள்.

4. ஸ்ரீ வஜ்ரேஷ்வரி - மார்பகங்கள் விழுந்த இடம்.

5. ஸ்ரீ வைஷ்ணோ தேவி - சதியின் ஒரு புஜம் விழுந்த இடம்.

6. ஸ்ரீ சாமுண்டா தேவி - இங்கு சதியின் உடல் பகுதி எதுவும் விழவில்லை. ஆனால், அன்னை சண்ட, முண்ட அசுரர்களை வதம் செய்த இடம் என்பதால் இரட்டிப்பு சக்தி வாய்ந்த மிகவும் உக்கிரமான தலம்.

7. ஸ்ரீ மானஸா தேவி - சதியின் தலை விழுந்த இடம்.

8. ஸ்ரீ ஷாகும்பரி தேவி - தலையின் நெற்றிப்பகுதி விழுந்த இடம்.

9. ஸ்ரீ காலிகாஜி - சதியின் கூந்தல் விழுந்த இடம். இதனை சக்தி பீடமாக எடுத்துக் கொள்வதில்லை
என்றாலும், மிகப் புனிதமான மகா சக்தி வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது.

Jebamani Devadasan

 " நல்லாசிரியர்" ஜெபமணி  தேவதாசன்              
           நெல்லை மாவட்டம் , ராதாபுரம் தாலுகா , வடக்கு வேப்பிலாங்குளம் ஊரை சேர்ந்த தேவதாசன் மற்றும் செல்லவடிவு தம்பதியரின் மகன் ஜெபமணி தேவதாசன் ஆவர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 1986 ஆம் ஆண்டு தன் மேல்நிலை படிப்பை முடித்துவிட்டு மும்பை முலுண்டில் இருந்த தன் அண்ணன் வீட்டிற்க்கு வந்தார். பின் ஓராண்டுகாலம் இரும்பாலை ஒன்றில் பணியமர்ந்தார். கல்வி மீதிருந்த தீராத தாகத்தால் மீண்டும் தன் படிப்பை தொடர உதவுமாறு அண்ணனிடம் கேட்டுள்ளார். தம்பியின் கல்வி பசியை புரிந்துகொண்ட அண்ணன் அவரை ஊருக்கு அனுப்பி மேற்படிப்பிற்கான ஏற்பாடுகளை செய்து கல்விக்கான செலவையும் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டார். இளநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் சொந்த ஊரில் உள்ள TDTA பள்ளியில் ஆசிரியராக தன் பணியை துவங்கினர். 1992-93 ஆம் ஆண்டு வரை அங்கு பணிபுரிந்தார். பின்னர் மீண்டும் மும்பைக்கு வந்தார். 1993 ஆம் ஆண்டு முதல் மாதுங்காவில் உள்ள கே.சி.முனிசிபல் பள்ளியில் ஆறாம்வகுப்பு ஆசிரியராக பணியாற்றினார். சுமார் ஐந்து ஆண்டுகாலம் அங்கு பணிபுரிந்த அவர் பள்ளி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிமாற்றம் செய்யப்பட்டர். இங்கும் சுமார் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் காட்கோபர் ஜெயந்திலால் பள்ளிக்கு மற்றம் செய்யப்பட்டார். கடந்த 2004 ஆம் ஆண்டுவரை ஓராசிரியர் பள்ளியாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் மாநகராட்சி அப்பள்ளியை மூடிவிட முடிவு செய்தது. ஏற்கனேவே மும்பையில் தமிழ்வழி கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகள் மிகக்குறைவு. அதிலும் இருக்கும் பள்ளியும் மூடிவிட்டால் மாணவர்கள் கல்வி கற்க நெடுந்தூரம் பயணிக்கவேண்டிவரும் என்பதினை மனதில்கொண்டு பணிநேரம் போக மீதம் உள்ள நேரத்தில் காட்கோபர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள தமிழ் மக்களின் வீடுகளுக்கு சென்று பிள்ளைகளின் கல்வி அவசியத்தினை எடுத்து கூறி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுகொண்டார். பெற்றோரும் தம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். இதனால் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயந்தது. பள்ளியை மூடிவிட திட்டமிட்டிருந்த மாநகராட்சி மாணவர்களின் எண்ணிக்கை உயந்ததை அடுத்து அந்ததிட்டதினை கைவிட்டது. ஓராசிரியர் பள்ளியாக இருந்ததை ஈராசிரியர் பள்ளியாக தரம் உயர்த்தியது. ஜெயந்திலால் பள்ளியின் தரம் உயர்வதற்கு முழுகாரணமாக இருந்தது ஜெபமணி ஆசிரியரின் விடாமுயற்சியும் கடின உழைப்புமே என்றால் மிகையாகது. மூடுவதற்கு தயராக இருந்த ஒருபள்ளியை முடவிடாமல் தடுத்து மட்டுமின்றி அதன் தரம் உயர்வதற்கும் காரணமாக இருந்ததை பாராட்டி விக்ரோலி தாகூர் நகர் மாநகராட்சி பள்ளிக்கு 2006 ஆம் ஆண்டு மற்றம் செய்யப்பட்டார். அதன்பின் மும்பை மட்டுமல்லாது அதன் சுற்று புறத்தில் உள்ள புறநகர் பகுதிகளுக்கும் சென்று தமிழ் மக்களை சந்தித்து தம் பிள்ளைகளின் கல்வியறிவு அவசியத்தை எடுத்துரைத்து பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தார். பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு நன்கொடைகள், சீருடை, மற்றும் ஏடுகள் கிடைக்க பெரிதும் பாடுப்பட்டார். தனக்கு தெரிந்த, தெரியாத புரவலர்களை சந்தித்து ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவுமாறு கேட்டு அதன் மூலம் ஏழை மாணவர்கள் கல்விகற்க வழிசெய்தார். தாகூர் நகர் பள்ளியில் புரவலர் ஒருவர் மூலம் 27  ஏழை மாணவர்களுக்கு உதவிசெய்து வருகிறது. உதவி பெரும் மாணக்கர்களில் பெண்பிள்ளைகள் இருந்தால் அவர்களின் உயர்கல்விக்கும் வழி செய்து கொடுக்கின்றனர். அத்திட்டதினையும் இடைவிடாமல் தொடர செய்தார். 20- ஆண்டுகால ஆசிரியர் பணியை செம்மையாகவும் சிறப்பாகவும் செய்ததினை பாராட்டி 13/09/2011 அன்று நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. ஆசிரியர் பணிமட்டுமல்லது இறைபணியிலும் , சமூகபணியிலும் நட்டம் ஜெபமணி ஆசிரியர் தன்வாழ்வில் பெரும்பாலான நேரத்தினை ஏழை எளிய மக்களுக்கு தொண்டு செய்வதிலேயே திருப்பதி கண்டார். "தன் இந்தளவுக்கு முன்னேறி இருப்பதற்கும் நல்லாசிரியர் விருது பெற்றதற்கும் காரணமாக இருந்தது தன் அண்ணன் செல்லதுரையே ஆவர். அவர் மட்டும் என் உயர்கல்விக்கு உதவி செய்யாவிட்டால் தான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்க முடியாது. " என்று கூறி மனம் நெகிழ்கிறார் ஜெபமணி நல்லாசிரியர், இவருடைய துணைவியரும் மழலைகள் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். 
                ஏழை எளிய குழந்தைகளும் கல்விகற்க பெரிதும் உதவியாக இருக்கும் ஜெபமணி ஆசிரியருக்கும், அவர்போன்று இன்னும் முகம்காட்டமல் உதவும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்  மும்பைதமிழனின் நெஞ்சார்ந்த நன்றி மற்றும் பாராட்டுகள். எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நல் ஆரோக்கியத்தையும் கொடுக்க இறைவனை பிராத்திக்கிறோம்.
  என்றென்றும் நன்றியுடன் 
மும்பைதமின்.காம்

annadurai (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969)

காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை  (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்றப் பெருமையுடன், அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.


                                         தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவாரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.
                    அதன்பின் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.பெரியாரின் தனித்திராவிடநாடுக் கொள்கையின் காரணமாகவும், தன்னைவிட வயதில் இளையவரான மணியம்மையாரை பெரியார் மணம் புரிந்துகொண்டமையினால் கருத்துவேறுபாடு கொண்டு, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949 ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். தனிக்கட்சி துவங்கினாலும் தன்கட்சி கொள்கைகள் தாய்க்கட்சியான திரவிடக்கட்சியை ஒத்தே செயல்பட்டது. இந்தியாவின் தேசிய அரசியலில் பங்குகொள்ளும் விதமாக இந்தியக் குடியரசானதிற்குப் பின் இந்திய சீனப் போருக்குப்பின் 1963 இல் தனது தனித்திராவிட நாடுக் கொள்கையை கைவிட்டார்.
                   ஆளும் காங்கிரசுக் கட்சிக்கெதிராக பல்வேறு போராட்டங்களில், பல்வேறு காலகட்டங்களில் ஈடுபட்டு அவ்வாட்சியை எதிர்க்கலானார். இறுதியில் 1965 இல் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபடலானார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்களாதரவை அவரும், அவரது கட்சியான திராவிட முன்னேற்றக் கட்சியும் அபரிமிதமாக பெற்றன.
                             1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர், 2-3 பிப்ரவரி 1969 ல் காலமானார். அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பல கல்வி நிறுவனங்கள், கட்சிகள் அவரின் பெயரில் துவக்கப்பட்டன.
                     ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார். திமுக விலிருந்து பிரிந்து தனிக்கட்சி துவக்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் அவரின் பெயரைக்கொண்டு உருவாக்கிய அண்ணாத் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியினால் பெற்ற வெற்றியைக் கொண்டு தமிழகத்தின் ஆட்சியை பின்னாளில் நடத்தினார் என்பது வரலாறு.
                      அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் (முன்னாளில் கஞ்சிவரம்) செப்டம்பர் 15, 1909, இல் நடராசன் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர்.அவர் தமக்கையார் ராசாமணி அம்மாளிடம் வளந்தார். மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை ஆகையால் அவர் தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்ட அண்ணாதுரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக சிறிது காலம் பணிபுரிந்தார்.
                                   1934 இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்), மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார் . ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.
                   கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்ற மனப்பான்மை அன்றைய காலகட்டத்திலும் ஆங்கில மோகம் அதிகமிருந்தது. ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது, அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசி காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அவர் பாட்டியின் அன்பு கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.
             அண்ணாதுரை இந்துக் குடும்பத்தில் பிறந்தவராயிருந்தாலும் அவரின் கோட்பாடு சமயம் சாராதாவராகவே வெளிப்படுத்துகின்றது. அவர்


"ஒன்றே குலம், ஒருவனே தேவன்"
என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தினார்.


"கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று தான்"
என்பது அவர் கட்சியின் கொள்கை பரப்பாகவும், அவரின் தொண்டர்களாக கருதப்படும் அவரின் தம்பிகளின் கட்சி வாசகமாகவும் பின்பற்றப்பட்டது. அவர் ஒரு நேர்காணலில் ".....நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்......" என்றார்.
அண்ணாதுரை மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடினார், ஆனால் என்றுமே அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் தலையிட்டதோ எதிர்த்த்தோ இல்லை.
                      அறிஞர் அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்பாடுகள் இவை. கட்டுப்பாடு, கடமை ஆகியவை தனிப்பட்டு ஓர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதபடுகின்றது. கண்ணியம் என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் - அரசியலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் காட்டிடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல், எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்மை பொதுவாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும்.
                            அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935 இல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நீதிக்கட்சி பிராமணரல்லாதோருக்கான அமைப்பாக 1917 இல் மதராஸ் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும் விதத்திலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் விதமாக பல உதவிகளை புரிந்து வந்தது.
                பின்னாளில் இது அரசியல் கட்சியாக சர். பி.டி. தியாகராய செட்டி மற்றும் டி. எம். நாயர் தலைமையில் துவக்கப்பட்டது. இக்கட்சி பின்னர் தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் எனப்பெயரிடப்பட்டு பின் நீதிக்கட்சியாக பெயர் மாற்றம் கண்டது. இக்கட்சியே சென்னை இராசதானியில் சுயாட்சி முறையை பின்பற்றி 1937 இல் இந்திய தேசிய காங்கிரசால் தோற்கடிக்கப்படும்வரை ஆட்சியில் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் அண்ணாதுரை நீதிக்கட்சியில் பெரியாருடன் சேர்ந்தார். பெரியார் அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.
அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பொற்ப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழை (திராவிட நாடு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது) தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழ்கம் என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்.
                  பிரித்தானிய காலணிய ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிக வன்மையாக எதிர்த்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு வழிவகுத்தது. இக்கட்சி பெரும்பாலும் பிரமாணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக தென்னிந்திய மக்களாலும் குறிப்பாக பெரியாராலும், தமிழர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து தென்னிந்தியாவை மீட்கப் பெரியார் பெரிதும் விரும்பினார். இக்காரணங்களை முன்வைத்தே பெரியார் இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்டு 15, 1947 அந்த நாளை கருப்பு தினமாக  எடுத்துக்கொள்ளுமாறு அவரின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அண்ணாதுரை இக்கருத்தில் முரண்பட்டார். இக்கருத்து பெரியாருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் விரிசல் ஏற்படக் காரணமாயிற்று. அண்ணாதுரை இந்தியாவின் சுதந்திரம் அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது. அது வெறும் ஆரிய, வடஇந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல என்பதை வலியுறுத்தினார்.
திராவிடர் கழகம் ஜனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை எதிர்த்தும் அண்ணாதுரை முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக 1948 இல் நடைபெற்ற கட்சிகூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார்.
                பெரியார் தேர்தலில் பங்குபெருவதால் தனது பகுத்தறிவு, சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற அவரின் கொள்கைகளுக்கு சமாதானமாக போகக்கூடிய நிலையை அல்லது சற்று பின்வாங்கும் நிலைபாட்டை அவர் கட்சிக்கு ஏற்படுத்துவதில், (தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலை) பெரியார் விரும்பவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய சமுதாய சீர்திருத்தங்களை, சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரங்களை தடையின்றி, அரசுக்கெதிராகவும் மேற்கொள்ள முடியும் என்பதை பெரியார் நம்பினார்.
இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின் வயது 30) மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
அண்ணாதுரை, மற்றும் பெரியாரின் மருமகன் மற்றும் வாரிசு என கருதப்பட்டவரும், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவருமான ஈ.வெ.கி. சம்பத்) மற்றும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து புதியக்க்டசி துவக்க முடிவெடுக்கப்பட்டு, அதன்படி அக்கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் சூட்டப்பெற்றது. அண்ணாதுரை மேல்வகுப்பு சாதிப்பிரிவான முதலியார் வகுப்பைச் சார்ந்திருந்தாலும் கீழ்தட்டு சாதி வகுப்பினரின் சமூக உரிமைகளுக்காக பாடுபட்டமையால் அம்மக்களின் அபரிமிதமான செல்வாக்கை வெகு விரைவிலேயே பெற்றார் அவர் தொடங்கிய திமுக வும் செல்வாக்கை பெற்றது.
                      திராவிடர் கழகத்தில் அணணாதுரை இடம்பெற்றிருந்தபொழுது, பெரியாரின திரிவிட நாடுக் கொள்கைக்கு ஆதரவு நல்கினார். திமுக வின் ஆரம்ப காலகட்ட கொள்கையிலும் இது இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் வாரிசாக கருதப்பட்ட ஈ.வெ.கி. சம்பத் திராவிட நாடு கொள்கையை எதிர்த்து, திராவிட நாடு கோரிக்கை நிச்சயமற்ற இலக்கை அடைய எடுக்கப்படும் வீண்முயற்சி என்று கருதி திமுகவில் இணைந்தவர் ஆவார்.
ஈ.வெ.கி. சம்பத்தின் கொள்கையை வலியுறுத்தும் விதமாக அண்ணாதுரை இவ்வாறு அறிவித்தார்


நாம் அதிக தேர்தலை சந்திக்க சித்தமாயிருக்கவேண்டும், அதன்மூலம் அதிகத் தொகுதிகளை மக்களின் நம்பிக்கைகள் மூலம் வென்றிட, எத்தனை தடைகள் வந்தாலும் மீண்டும் மீண்டும் அதை எதிர்த்து போராட எண்ணம் கொண்டு செயல்படவேண்டும்
.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் தமிழ் திரைக்கலைஞர்களை முன்னிருத்தி கட்சி செயல்பட்டது ஈ.வெ.கி. சம்பத்திற்கு அக்கடசியில் அதிருப்தியை உருவாக்கியது அதன் காரணமாக திமுக விலிருந்து விலகி தமிழ் தேசியவாதக் கட்சி என்ற தனிக்கட்சியை 1961 இல் துவங்கினார். 1962 இல் அண்ணா மாநிலங்களைவையில் திராவிடர்கள் தங்கள் சுயமரியாதையை காத்துக்கொள்ள விரும்புகின்றனர்.....நாங்கள் கோருவது தென்னிந்தியா என்ற தனிநாடு.
இந்தியா மொழிவாரி மாநிலமாக அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கன்னடம், தெலுங்கு, மற்றும் மலையாளம் என சென்னை இராசதானியிலிருந்து (மெட்ராஸ் இராஜதானி)அந்தந்த மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதன் உள்ளார்ந்த உண்மையை அறிந்த பிறகு அண்ணாதுரை திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கோரிக்கையை கைவிட்டு தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று மாற்றினார்.
இந்திய சீனப் போர் இந்திய அரசியலமைப்பில் சில மாறுதல்களை உருவாக்கியது. இந்தியாவின் 16 வது திருத்தச் சட்டமாக (பெரும்பாலும் அனைவராலும்அறியப்படும் சட்டம் -பிரிவினைவாத தடைச்சட்டம்) பிரிவினைவாதத்தை முற்றிலும் தடைசெய்யும் விதமாக கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் இந்திய நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்படும்பொழுது அண்ணாதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தை அண்ணாதுரையால் பலமாக ஆட்சேபித்தும் அச்சட்டம் நிறைவேற்றப்படுவதை தடைசெய்ய முடியவில்லை. அதன் விளைவாக திமுக கட்சியினர் அக்கோரிக்கையை வலியுறுத்துவதிலிருந்து தங்களை விலக்கி கொண்டனர். திமுகவின் தனித்தமிழ்நாடு நாடு கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. அதுமுதல் அண்ணாதுரை தன்கொள்கையை நடுவண் அரசின் இணக்கமான ஆதரவை தென்னிந்திய மாநிலங்கள் பெறும் விதமாக தன்னுடைய மாநில சுயாட்சி கொள்கையினை வலியுறுத்த ஆரம்பித்தார். தமிழகத்தின் மாநில சுயாட்சியை பெரிதும் வலியுறுத்தினார்.
மாநில சுயாட்சி கொள்கையில் அவர் கட்சியின் நிலைப்பாட்டை இவ்வாறு தெளிவுபடுத்தினார்.


திராவிட நாடு என்பது எங்களது தனிக்கொள்கை. அவற்றை பேசவோ அல்லது எழுதவோ உகந்த சூழ்நிலை இப்போது இல்லை. நாங்களே நாட்டின் நிலைமையறிந்து, அதனால் எழும் விளைவுகளறிந்து கைவிட்டோம். அக்கட்சியே அவற்றிலிருந்து விலக்கிகொண்டபொழுது அக்கொள்கை பரவவோ மீண்டும் எழவோ வாய்ப்பில்லை. இதை முன்னிருத்தியே அக்கொள்கையை கைவிட்டோம்.
                               1953 இல், அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி திமுக மூன்று கண்டனத்தீர்மானங்களை முன்மொழிந்தது:
  • இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மதராஸ் மாநிலத் தலைவர்களின் மொழிக்கொள்கையை இழிவுபடுத்துகின்ற செயலை கண்டனம் தெரிவித்தது.

  • மதராஸ் மாநில முதல்வர் சி.ராஜகோபாலச்சாரி (இராஜாஜி), அறிமுகப்படுத்திய குலக்கல்வித் திட்டம் , எதிர்மறையாக குலத்தொழிலை வலியுறுத்தும் விதமாக அமைந்திருப்பதை (குலவழிக்கல்விமுறை) எதிர்த்து கண்டனம் தெரிவித்தது.

  • கல்லக்குடியை டால்மியாபுரம் என்ற பெயர் மாற்றியதை எதிர்த்து, மீண்டும் கல்லக்குடி என்று மாற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து கண்டனத்தை தெரிவித்தது.

        இந்தி முதன்முதலில் அலுவலக மொழிக்கான தகுதியான மொழியாக மோத்திலால் நேரு தலைமையிலான குழு இந்திய அரசாங்கத்திற்கு (பிரித்தானிய அரசாங்கம்) பரிந்துரை செயதது. அது முதல் தமிழ் நாட்டில் பலதரப்பட்ட மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் எதிர்ப்புகள் காட்டப்பட்டன. இதனால் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக இந்தி பேசும் வட இந்தியர்களால் தமிழர்கள் வேறுபடுத்தி காட்டப்பட்டனர்.
                              1938 இல் மதராஸ் இராசதானியில் காங்கிரசு அரசு சி.ராஜகோபாலாச்சாரி தலைமியில் ஆட்சி நடத்தி வந்தது. தமிழகத்தில் இந்தி பயன்பட்டை முன்மொழிந்தவர் இராஜாஜி, பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக அவருடைய ஆட்சிகாலத்தில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் தமிழ் ஆன்றோர்கள், தலைவர்கள், புலவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தமிழ் பற்றாளர்களாலும் எதிர்க்கப்பட்டது.
அண்ணாதுரை மற்றும் தமிழ் அறிஞர்கள் பாரதிதாசன் உட்பட இந்தி எதிர்ப்பு இயக்கம் நடத்தினர். காஞ்சிபுரத்தில் 27 பெப்ரவரி, 1938 இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை கலந்து கொண்டார். மாநாட்டை கலைக்க காவல் துறை எடுத்த தடியடி நடவடிக்கையால் பலத்த காயமுற்று தாளமுத்து மற்றும் நடராசன் என்ற இரு தமிழ் போராட்ட வீரர்களும் மாண்டனர். இறுதியாக தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பின் காரணமாக மதராஸ் இராசதானி அரசு அச்சட்டத்தை 1940 இல் திரும்ப பெற்றது.
                          இந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை:


இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது, அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதால். ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே. அல்லது ஏன் மயில் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது?, உண்மையில் பெரும்பான்மை பறவை காகம் தானே


தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகும்வரை, எனக்கு உண்மையாக திருப்தியே கிடையாது. இந்திய மொழிகளில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைப்பது - இந்தியை தாய்மொழியாகக் கொண்ட நல்ல கால் உடையவர்களுக்கும் இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத ஊனக்கால் உடையவர்களுக்கும் இடையே வைக்கும் ஓட்டப் பந்தயம் போன்றது.
மொழி உணர்வுக்கு மதிப்பு அளிக்கப்படுவது உண்மையாயின், ஒரு மொழி எத்தனை சதவிகிதத்தினரால் பேசப்படுகிறது என்ற ஆராய்ச்சியே அநாவசியமானது.
திமுக கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து 1960 இல் ஆகஸ்டில் சென்னை, கோடம்பாக்கத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு அண்ணாதுரை தலைமையில் நடத்தப்பட்டது. இந்தி திணிப்பிற்கெதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யபட்டது. இந்தியக் குடியரசுத்தலைவர் வருகையின் பொழுது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவெதெனவும் முடிவு செய்யப்பட்டது. இதன் கிளர்ச்சியையும் இந்தி எதிர்ப்பு உணர்வாளர்களின் எழுச்சியையும் கண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தி பேசா மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் வண்ணம் இந்திய அரசியலமைப்பில் திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றினார். இதனால் கருப்புக்கொடி ஆர்பாட்டம் கைவிடப்பட்டது.
இந்த திருத்த சட்டம் கொண்டு வரப்படாவிட்டால் இந்தியாவின் 15 வது குடியரசு தின்த்தை 26 ஜனவரி, 1965 துக்கதினமாக அறிவிக்கபோவதாக அண்ணாதுரை அறிவித்தார். இந்த அறிவிப்பை அன்றைய மதராஸ் மாநில முதலமைச்சரான பக்தவச்சலம் அண்ணாதுரைக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக கருப்புதின அறிவிப்பை 24 ஜனவரி அன்று மாற்றியமைத்தார். இதற்கான அறைகூவலாக அண்ணாதுரை முழங்கியவை இந்தியை ஒழித்து, இந்தியக் குடியரசு நீண்ட ஆயுளுடன் வாழ்க. 
                               சட்டமன்றத்தில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தபொழுதிலும், அளுங்கட்சியாக இருந்த பொழுதிலும் அவர் பணி சிறந்ததாகவே கருதப்ட்டது. அவரின் பேச்சு கண்ணியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்பவரையும் சிந்திக்கவைக்கவும், கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைக்குனிய வைக்கும் நிலையிலேயே அவரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.
1962 இல் அண்ணாதுரை மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றசாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்த்தை கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றசாட்டு, அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றசாட்டை அண்ணாதுரை இவ்வாறு பதிலுரைத்தார்.


நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்
என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.
                           அண்ணாதுரை மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். எழுத்தாற்றளும் பெற்றவர்.
பல புதினங்களும், சிறு கதைகளும் மற்றும் அரசியல் நாடகங்களும், நாடாகமாக்கம், திரைக்கதைகள் எழுதியவர். அவரே கதாபாத்திரமேற்று நாடகங்களில், திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்கங்களாக அரசியலுக்காக பயன்படுத்தியவர் அண்ணாதுரை. இவரின் முதல் திரைப்படம் நல்லதம்பி (1948) இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்துள்ளார். இதில் ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும். அவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி (1949) மற்றும் ஒர் இரவு, போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. இவைகள் திராவிட அரசியலின் பிரச்சாரமாக இத்திரைப்படங்கள் திகழ்ந்தன.
வேலைக்காரியில் அணணதுரை அடக்குமுறையை கையாளும் நிலச்சுவான்தாரர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் காந்தியுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதை விளக்குகின்ற விதமாக எடுத்துக்காட்டப்பட்டது.
                      இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் பிராமண எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரங்களாக விளங்கின.. இப்பிரச்சாரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நாடகமேடை கலைஞர்கள் மற்றும் திரைக்கலைஞர்களாக அண்ணாதுரைக்கு பக்கபலமாக விளங்கியவர்கள் டி.வி. நாராயணசாமி, கே.ஆர்.ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன்.
அண்ணாவின் சில நூல்கள் மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கியவை. அவற்றில் ஆரிய மாயை (ஆரியர்களின் போலித்தோற்றம்) பிராமணர்களை கடுமையாகச் சாடியதாக விமர்சிக்கப்பட்டது. ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதபட்டிருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த நூலுக்காகவும், கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காகவும் அவருக்கு ரூபாய் 700 அபராதம் (தண்டம்) விதிக்கப்பட்டது. சிறைத்தண்டணையும் அளிக்கப்பட்டது.
                   மே 1956 இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி வி.ஆர்.நெடுஞ்செழியனை அப்பொறுப்பில் நியமித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின்படி இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து தேர்தலில் பங்கு கொண்டது.
                    1957 ல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டமன்றத் தொகுதிகளையும் இரண்டு நாடாளுமன்றத்தொகுதிகளையும் வென்றது.அண்ணாதுரையும் காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.. திமுக முதல் முறையாக மதராஸ் மாநில சட்டமன்றத்திற்குள் நுழைந்தது.
                       1962 இல் திமுக மிகப்பெரியக் கட்சியாக காங்கிரசை அடுத்து உருவெடுத்திருந்தது. அப்பொழுது நடைபெற்றத் தேர்தலில் திமுக 50 சட்டமன்றத் தொகுதிகளில் வென்றது. அண்ணாதுரை அத்தேர்தலில் தோல்வியுற்றார். பின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கபெற்று அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். 1967 ல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார்.
                அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பெப்ரவரி, 1969 இல் மரணமடைந்தார். அவர் புகையிலையை உடகொள்ளும் பழக்கமுடையதால் (புகையிலைப் பொடி நுகரும் பழக்கம்) அந்நோய் தீவிரமடைந்ததினால் மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில். இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் நினைவை போற்றும் வகையில் அவ்விடம் அண்ணா சதுக்கம் என்றப் பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
                          தமிழ்நாடு அரசு பேரறிஞர் அண்ணாவின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என்கிற பெயரில் அமைத்துள்ளது. இங்குபேரறிஞர் அண்ணா அவர்கள் உட்கார்ந்த நிலையிலான சிலை வைக்கப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் அவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பேரறிஞர் அண்ணா நினைவிடம் எனும் பெயரில் நினைவிடமாக ஆக்கியுள்ளது. பேரறிஞர் அண்ணாஅவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள் அவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. வேலூரில் உள்ள அரசு திரையரங்கம் அண்ணா கலை அரங்கம் என பெயர் சூட்டப்பட்டு போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இங்கு 24-9-1968 முதல் சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடப்பட்டு பின்பு 9-7-1971 முதல் "அண்ணா கலை அரங்கம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.