navrathiry



நவராத்திரி கொலு விழா

Imageஅன்னை பராசக்தியை ஆராதிக்கும் திருநாட்களில் முக்கியமானது நவராத்திரிப் பெருவிழாவாகும். அனைத்தையும் இயக்குவது ஆதிசக்தியே என்று வேதங்களும், புராணங்களும் கூறுகின்றன. அந்தப் பரம்பிரம்ம வடிவமான ஜகன்மாதாவுக்கு பக்தர்கள் செய்யும் பூஜையாக அமைகிறது நவராத்திரி.
Image"அனைத்தும் தேவி மயம்' என்னும் உண்மையையும், அன்னைக்கு எவ்வுயிரினிடத்தும் சரிசமமான அன்பு உள்ளது என்பதையும் உணர்த்துவது நவராத்திரி பெருவிழாவின் தத்துவம். பொதுவாகப் பூஜைகளை பகலில் செய்வதுதான் சிறப்பானதாகக் கருதுவார்கள். ஆனால் சிவராத்திரியும், நவராத்திரியும் அதற்கு விதிவிலக்கு; இவற்றில் மாலை (அல்லது) இரவு பூஜை விசேஷம்.
நவராத்திரியின் வகைகள்:-
ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருகின்றன. ஆனி மாத அமாவாசைக்கு பிறகு வரும் ஒன்பது நாட்களை "ஆஷாட நவராத்திரி' என்றும், புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களை "சாரதா நவராத்திரி' என்றும் (மகா நவராத்திரி என்றும் சொல்லுவார்கள்), தை மாதத்து அமாவாசைக்குப் பிறகு வருவதை "மகா நவராத்திரி' என்றும், பங்குனி மாதத்து அமாவாசைக்குப் பிறகு வருவதை "வசந்த நவராத்திரி' என்றும் வழங்குவர். இந்த நான்கு காலங்களில் விரத பூஜைகளை மேற்கொள்ள முடியாதவர்கள், குறைந்தபட்சம் சாரதா நவராத்திரி ஒன்பது நாட்களிலாவது அம்பாளை பூஜிக்க வேண்டும் என்று பெரியோர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
நவராத்திரி பூஜை:-
பரப்பிரும்மம் ஒன்றே! எனினும் உலக மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று ரூபமாகத் தன் சக்தியை பராசக்தி வெளிப்படுத்துகின்றாள். இதன் அடிப்படையில்தான், நவராத்திரி தின ஆரம்பத்திலிருந்து முதல் மூன்று நாட்களுக்கு துர்கா சக்தி ரூபமாகவும், இரண்டாவது மூன்று நாட்களும் லட்சுமி வடிவாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ரூபமாகவும் அம்பாள் கொலுவீற்றிருந்து அருள் பாலிக்கின்றாள். துன்பங்களையெல்லாம் போக்குவதற்காக துர்கா தேவியை வணங்குகிறோம். பொருளாதார நெருக்கடி தீர்ந்து வாழ்க்கைக்குத் தேவையான பொருள் கிடைக்க வேண்டி லட்சுமியை வழிபடுகின்றோம். நல்ல அறிவு இருந்தால்தான் பூர்ண ஆனந்தத்தை அடைய முடியும் என்று அடிப்படையில் ஞானம் வேண்டி சரஸ்வதியைத் துதிக்கின்றோம். இப்படி அம்பாளை இம்மூன்று வடிவங்களில் நவராத்திரி தினங்களில் பூஜை செய்கிறோம்.
இந்த நவராத்திரி விழாவை அவரவர்கள் தம் சக்திக்கு ஏற்பக் கொண்டாடலாம். அம்பிகையை விக்கிரக ரூபத்திலோ, படங்களிலோ பிரதிஷ்டை செய்து முறைப்படி பூஜை செய்யலாம். ஒன்பது நாட்களிலும் தேவிபாகவத பாராயணம் செய்யலாம். சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் இல்லத்திற்கு வரவழைத்து, அவர்களை தேவியாகவே கருதி தாம்பூலம், பழங்கள், வஸ்திரங்கள், வீட்டு உபயோகத்திற்குத் தேவையான சிறிய பொருட்களை அளித்து மகிழலாம். பலவித நறுமண மலர்களைக் கொண்டு பூஜிக்கலாம். பல்வேறு வகையான பதார்த்தங்கள், பட்சணங்களை அம்பாளுக்கு நிவேதனமாக அர்ப்பணித்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். அம்பிகையின் பெருமைகளைக் கூறும் இசைப்பாடல்களைப் பாடி ஆனந்திக்கலாம். எல்லாவற்றிலும் முக்கியமாக அன்னை வீற்றிருந்து அருள்புரியும் ஆலயங்களுக்குச் சென்று அவளை விசேஷ அலங்காரங்களில் தரிசிப்பதும் நவராத்திரியின் ஒரு அம்சமாகும்.
நவராத்திரி விழாவை இவ்விதங்களில் கொண்டாடினால் நாம் விரும்பும் பலன்களைப் பெறலாம். புராணங்கள்கூட ஸ்ரீராமபிரான், அன்னையை நவராத்திரி காலத்தில் பூஜை செய்தார் என்று கூறும். இதனை நிறுவும் வகையில் ஸ்ரீலலிதா திரிசதி என்னும் துதியில், ""லக்ஷ்மணாக்ரஜ பூஜிதாயை நம: '' என்று வருகின்றது. அதாவது லட்சுமணனுக்கு மூத்தவனான ராமனால் பூஜிக்கப்பட்டவள் அம்பிகை என்பது இதன் பொருள். மகாகவி பாரதியார் தன்னுடைய "உஜ்ஜயினி...' என்று தொடங்கும் நவராத்திரி பாட்டில் அம்பாளைக் குறித்து,
""சத்ய யுகத்தை அகத்திலிருத்தி,
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி'' - என்று பாடுகிறார்.
நவராத்திரி கொலு:-
நவராத்திரி புண்ய தினங்களில் இல்லங்களில் கொலுப்படி அமைத்து தெய்வப் பொம்மைகளை வைத்து மகிழ்வது தொன்றுதொட்டு வரும் வழக்கம். சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவருக்கும் இதில் ஈடுபாடு உண்டு. ஆனால் இந்தக் கொலு வருடத்தில் ஒன்பது அல்லது பத்து நாட்களுக்கு மட்டும்தான். ஆனால் எது உயர்ந்தது? அந்தப் பரமேஸ்வரியை நம் இதயத்தில் எப்போதும் நிரந்தரமாகக் கொலு வீற்றிருக்கச் செய்ய வேண்டும். அதுதான் உயர்ந்தது. இந்தக் கருத்தினை காஞ்சி மகா சுவாமிகள் எவ்வளவு தெள்ளத் தெளிவாக அவரது அருளுரையில் கூறியிருக்கிறார் பாருங்கள்.
""துணி அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. உடம்பு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. வீடு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் ஆக வேண்டும். அதற்கு அம்பாளுடைய சரணாரவிந்தத் தியானம்தான் வழி. அவளுடைய தியானத்தில்தான் சகல பாவங்களும் நிவர்த்தியாகும்; சகல க்ஷமங்களும் உண்டாகும்''.
எனவே வரும் நவராத்திரி நன்னாளில் (29.09.08 முதல் 09.10.08 வரை) அம்பிகையை இல்லத்தில் கொலு வீற்றிருக்கச் செய்து வழிபடுவோம். பின்னர் வாழ்நாள் முழுவதும் அன்னையை நம் இதயத்திலும் "கொலு' வீற்றிருக்கச் செய்வோம். வாழ்க பராசக்தி!

No comments:

Post a Comment