இலங்கைக்கு எதிராக ஆசாத் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்பு 
                      மும்பையில் , மார்ச் 21, 2013 அன்று இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசு எதிராகவும் ஆசாத் மைதானத்தில் மும்பை தமிழர் பாதுகாப்புக் குழு சார்பாக நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் மும்பை முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் மதிமுக செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.
                  இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தற்போது மும்பை வரை பரவி இருக்கிறது. கடந்த சில நாட்களாக மும்பையில் ஆங்காங்கே தமிழர்கள் வெவ்வேறு அமைப்புகள் சார்பாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஆசாத் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக கட்டண ஆர்ப் பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விடுமுறை இல்லாத நிலையிலும் இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதை பொறுக்காத தமிழர்கள் ஏராளமானோர் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
                 காலை 10 மணியில் இருந்தே மும்பையின் பல்வேறு பகுதியில் இருந்து தமிழர்கள் ஆசாத் மைதானத்தில் குவிய தொடங்கினர். ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் திரளாக கலந்து கொண்டு தங்களது இன உணர்வை வெளிப்படுத்தினர். இலங்கை தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகள் குறித்தும், தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு கிடைக்கவேண்டிய தண்டனை மற்றும் இலங்கையின் போர்க்குற்றத்திற்காக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டியது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து மும்பை தமிழ் பிரமுகர்களான ராஜேந்திர சுவாமி, ஏ.பி.சுரேஷ், எம்.கருண், பா.ஜ. பிரமுகர் ராஜா உடையார், எஸ்.அண்ணாமலை, சு.குமணராசன், பி.எஸ்.கே.முத்துராமலிங்கம், கே.வி.அசோக் குமார், ஆல்வின்தாஸ், நெரூல் சந்திரசேகரன் உட்பட ஏராளமானோர் பேசினர். அனைவரும் நேரத் தின் அருமை கருதியும் வைகோவின் உரையை கேட்க வேண்டும் என்பதாலும் தங்களது உரை யை மிகவும் சுருக்கமாக முடித்துக்கொண்டனர்.
                            இறுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார். சாதி, மதம், அரசியல் கட்சிகளுக்கு அப்பால் அனைவரையும் ஒன்று சேர்த்த கேப்டன் தமிழ்செல்வத்திற்கு தனது நன்றியை தெரிவித்து தனது உரையை தொடங்கினார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக மாணவர்கள் லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய அரசு ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு காரணமான சிங்கள அரசுக்கு ஆயுதக்குவியலை அள்ளிக்கொடுத்தது. என் ஆயுள் முடியும் வரை ஈழத்திற்கு எதிரான எனது குரல் ஒரு போதும் ஓயாது.
                          கடந்த சில நாட்களாக கோடிக்கணக்கான தமிழர்களின் ரத்தம் கொதிக்கிறது. ஈரப்பாலகன் பாலசந்திரனின் கொடூரமான கொலைதான் தமிழர்களை இன்றைக்கு வீறு கொண்டு எழச்செய்துள்ளது.
இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை. திட்டமிடப்பட்ட ஒரு இனப்படுகொலை. ஆயுதம் ஏந்தாத பெண்கள், குழந்தைகள், தாய்மார்கள் படுகொலை செய்யப்பட்டதை இனப்படுகொலை என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல முடியும். இனப்படுகொலைக்கு உதவியவர்களும் குற்றவாளிகள்.  இதே குற்றச்சாட்டை நேரில் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்தேன். இலங்கையில் தமிழர்கள் பகுதியில் உள்ள சிங்கள குடியேற்றங்களை வெறியேற்ற வேண்டும். முகாம்களில் அடைத்துள்ள அப்பாவி மக்களை விடுதலை செய்யவேண்டும்.
                      தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும். உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்கள் வாக்களிக்க வசதி செய்யவேண்டும். தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும். இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது இந்தியா வந்த போது ராஜபக்சே பிரதமரை சந்தித்து விட்டு வெளியில் வந்த போது போர்நிறுத்தம் வருமா என்று கேட்டதற்கு அதற்கு வாய்ப்பே இல்லை என்று ராஜபக்சே திமிருடன் தெரிவித்தார்.
                    தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜி தமிழகத்தில் கருணாநிதியை சந்திக்க வந்த போது இலங்கையில் போர்நிறுத்தம் வருமா என்று கேட்டதற்கு அது தங்களின் வேலை இல்லை என்று தெரிவித்தார். 2004ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இலங்கை போர் விமானத்தை பழுதுபார்த்து கொடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் அதையும் மீறி பழுது பார்த்து கொடுத்தது. அந்த விமானத்தின் மூலம் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி குண்டு வீசப்பட்டதில் 66 தமிழ் சின்னச்சிறுமிகள் உயிரிழந்தனர். இது குறித்து சோனியாவிடம் கேட்டதற்கு, எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட் டார். தமிழ் ஈழம் கிடைத் தால் தமிழ்நாடும் பிரிந்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தனி ஈழம் நிச்சயம் கிடைக்கும்.
                      இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு காரணம் இந்திய அரசுதான் காரணம். பாலசந்திரன் படுகொலைக்கு இந்தியாதான் காரணம் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. விடுதலைப்புலிகள் இருந்த போது தமிழர்களுக்கு எந்த வித ஆபத்தும் இல்லாமல் வாழ்ந்தனர். இது தொடர்பாக ஐரோப்பிய யூனியனில் பேசியபோது விடுதலைப்புலிகள் யாராவது பாலியல் பலாத்கார புகாரில் சிக்கி இருப்பதாக புகார் வந்ததுண்டா? இந்தியா தனது முப்படைகளையும் அனுப்பி இலங்கைக்கு தேவையான திட்டத்தை வகுத்துகொடுத்தது. அதனால்தான் இலங்கை விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய வீரர்கள் நேரில் உதவி செய்தனர்.
                            இப்போரில் இந்திய வீரர்கள் இரண்டு பேர் கூட காயம் அடைந்தனர். அப்போதுதான் இந்திய வீரர்கள் நேரடியாக போரில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இலங்கை தமிழர்கள் கொன்று குவிப்பதற்கு அப்போதைய வெளியுரவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன் முக்கிய காரணமாக அமைந்தனர் என்றும் பேசினார்.