Prema Jayakumar

பிரேமா ஜெயக்குமார்    

                மும்பை மலாட் பகுதியில் வசித்து வரும் தமிழ் மாணவி பிரேமா ஜெயக்குமார் சார்ட்டர்டு அக்கவுன்டென்ட் (சி.ஏ.) தேர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தில் வந்து சாதனை படைத்துள்ளார். மலாட், எஸ்.பி.கான் சாலில் வசித்து வருபவர் ஜெயக்குமார் பெருமாள். தமிழ்நாட்டை சேர்ந்தவர். மும்பையில் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோரிக்ஷா ஓட்டி வருகிறார். மனைவி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகள் பிரேமா சமீபத்தில் நடந்த சி.ஏ. தேர்வில் 800க்கு 607 மதிப்பெண்களை பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தில் வந்து சாதனை படைத்து இருக்கிறார்.   நாகின்தாஸ் கண்ட்வாலா கல்லூரியில் படித்த பிரேமா, கடந்த 2008ல் பி.காம் முடித்தார். அதன் பிறகு மும்பை பல்கலைக் கழக்கத்தில் எம்.காம். பட்டமும் பெற்றார். பி.காம் முடித்ததும் தொடர்ந்து சி.ஏ. தேர்வுக்கு படித்து வந்தார். 2012ல் நவம்பரில் சி.ஏ. தேர்வு நடந்தது. இத்தேர்வு எழுதிய பிரேமா இந்தியாவில் முதலிடத்தில் வந்து பாஸ் செய்திருக்கிறார். பிரேமா இளம் வயதில் இருந்தே கல்வி கற்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வந்திருக்கிறார். ஏற்கனவே சாதனையும் படைத்திருக்கிறார். மும்பை பல்கலைக்கழகம் நடத்திய பி.காம் மூன்றாமாண்டு தேர்வில் 90 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பல்கலைக் கழகத்தில் இரண்டாம் இடத்தில் வந்துள்ளார். பிரேமா இந்த சாதனையை படைத் தது மட்டுமின்றி தன் தம்பி தன்ராஜும் தன்னுடன் சேர்ந்து முதலாவது முயற்சியிலேயே சி.ஏ. தேர்வில் பாஸ் ஆவதற்கு உந்து சக்தியாகவும் இருந்துள்ளார். தன்ராஜ் எச்.எஸ்.சி. முடித்த உடனேயை சி.ஏ. தேர்வு எழுத தயாராகி வந்திருக்கிறார். தன்ராஜ் கடந்த 2010ல் பி,காம் முடித்தார். கால் சென்டரில் வேலை செய்து கொண்டே டிகிரி படித்து இருக்கிறார். சி.ஏ. தேர்வுக்கு இருவரும் சேர்ந்தே படித்து வந்துள்ளனர். தங்கள் இருவரையும் பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தகாகவும் அவர்களை நிம்மதியாக வாழ வைப்பதுதான் தனது லட்சியம் என்றும் பிரேமா கூறினார். தேசிய அளவில் மகத்தான சாதனை படைத்திருக்கும் பிரேமாவின் சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தில் உள்ள பெரிய கொல்லியூர். இவரது தந்தை ஜெயக்குமார் கடந்த 25 ஆண்டுகளாக மும்பை மலாடில் வசிக்கிறார். ஆரம்ப காலத்தில் சில ஆண்டுகள் மில் தொழிலாளியாக வேலை செய்து வந்த அவர், பின்னர் கடந்த 22 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், தனது மகள் பிரேமாவையும் மகன் தன்ராஜையும் படிக வைத்திருக் கிறார். அந்த வகையில் மாணவி பிரேமா, தனது தந்தையின் உழைப்பையும் அவரது அன்பையும் ரொம்பவே மெச்சுகிறார்.நாங்கள் வசிக்கும் வீடு மிக சிறியது என்றாலும், அந்த வீட்டிலும் கூட நானும் என் தம்பியும் படிக்கும் ஒரு சூழலை என் தந்தையும் தாய் லிங்கம்மாளும் உருவாக்கி தந்தனர்.எங்களின் படிப்புக்காக அவர்கள் இருவரும் தங்களது ஆசா பாசங்கள் அனைத்தையும் புறக்கணித்தனர். எங்கள் படிப்புக்கு தொந்திரவாக இருக்க கூடாது என்பதற்காக என் தாய் டி.வி. பார்த்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.   இப்போது நானும் என் தம்பி சி.ஏ.தேர்வில் வெற்றி பெற்றதற்கு என் பெற்றோரின் அர்ப்பணிப்புதான் காரணம். மலாட் மாநகராட்சி பள்ளியில் நான் படித்து வந்த காலத்திலேயே எனக்கு அமைந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் என்னை ஊக்குவிப்பவர்களாக இருந்தனர். எனது இந்த வெற்றிக்கு என் ஆசிரியர்கள்,   நண்பர்களும் முக்கிய காரணம்.