சி. இராஜகோபாலாச்சாரி - தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். சுருக்கமாக இராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரஸில் பெரும் பங்கு வகித்தவர். 1952 வரையில் கேரளம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட மதராஸ் (சென்னை) மாகாணத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.
பிற்காலத்தில் ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சுதந்திராக் கட்சியினைத் துவங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967 ல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர்.அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர்.சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்.
இராசாசியின் கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது.1900இல் தமது வழக்கறிஞர் தொழிலை நன்கு நடத்தி வந்தார்.பின்னர் அரசியலில் ஈடுபட்டு சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகரதந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.காங்கிரசில் சேர்ந்து ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம்,ஒத்துழையாமை இயக்கம்,வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார்.1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.பிரித்தானியா செர்மனியுடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.போர்க்காலத்தில் பிரித்தானியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது.பின்னாளில் முகமது அலி ஜின்னாவுடனும் அகில இந்திய முஸ்லிம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண விழைந்தார்.இவரது திட்டம் சி ஆர் பார்முலா என அழைக்கப்பட்டது. 1946ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில்,வழங்கல்,கல்வி மற்றும் நிதித் துறை அமைச்சராக பணியாற்றினார். 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.மாநிலங்கள் சீரமைப்பிற்கு முன்பான சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1954 வரை பதவி வகித்தார்.அப்போது அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமரிசனத்திற்கு ஆட்பட்டார்.காங்கிரசின் சோசலிச நோக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகி அரசின் பெர்மிட்-கோட்டா ஆட்சிக்கு மாறான தாராளமயத்தை கொள்கையாகக் கொண்ட சுதந்திராக் கட்சியை நிறுவி 1962,1967 மற்றும் 1972 பொது தேர்தல்களில் போட்டியிட்டார். 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.அவருடன் கூட்டணி கண்ட சி. என். அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.நாடாளுமன்றத்திலும் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது.
இராசாசி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார்.தமிழிலும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். இவர் கல்கி மற்றும் இரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா" இவர் இயற்றிய பாடலே.
1954ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது பெற்றார்.
தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் தருமபுரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு இராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது.

No comments:
Post a Comment