புனித வெள்ளி
இயேசு மரித்த நாள்
விவிலியத்திலுள்ள தகவல்களைக் கொண்டு இயேசு மரித்த நாளை சரியாகக் கணக்கிட முடியாது. விவிலியத்தில் இயேசு நிசான் மாதம் 14 அல்லது 15 ஆம் நாள் மரித்ததாக கூறப்பட்டுள்ளது. டைபிரியஸ் சீசரின் காலம் என்பதை விட ஆண்டு பற்றிய குறிப்பேதும் இல்லை. அனால் நான்கு நற்செய்திகளின் படியும் இயேசு மரித்தது ஆயத்தப்படுத்தல் நாளிலாகும். (ஓய்வுநாளுக்கு முதல் நாளாகும்) இதன் படி இயேசு மரித்தது வெள்ளிக்கிழமையாகும். மேலும் இயேசு மரித்த நாள் கி.பி. 33 ஏப்பிரல் 3 ஆம் நாளாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்தினத்தில் பகுதி சந்திரகிரகணமும் ஏற்பட்டுள்ளது. (இயேசு சிலுவையில் உயிர் நீத்தபோது வானம் இருண்டது). தற்போது புனித வெள்ளி ஏப்ரல் 23 க்கும் மே 7 க்குமிடையே ஒரு வெள்ளியில் அனுசரிக்கப்படுகிறது.உயிர்த்த ஞாயிறு
உயிர்த்த ஞாயிறு அல்லது பாஸ்கா (கிரேக்க மொழி:Πάσχα:கடந்து போதல்) இயேசுவை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையின் படி கி.பி.27-33 இல் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இது கிறிஸ்தவ வருடத்தில் மிக முக்கியமான திருநாளாகும். இது ஆண்டின் மார்ச் கடைசி முதல் ஏப்ரல் கடைசி வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இந்நாள் புனித வெள்ளிக்கிழமையில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.இயேசு கிறித்துவின் வாழ்க்கை, போதனை, சாவு ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற நற்செய்தி நூல்கள் அவர் தம் இறப்பிற்குப் பிறகு மீண்டும் உடலோடு உயிர்பெற்று எழுந்தார் என்றும் பதிவு செய்துள்ளன. இதுவே இயேசுவின் உயிர்த்தெழுதல் (Resurrection of Jesus) என அழைக்கப்படுகிறது.
இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி அவர் விண்ணேற்றமடைந்த நிகழ்ச்சியிலிருந்து (Ascension of Jesus) வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. இயேசு கிறித்து சாவின் மீது வெற்றிகொண்டு, உயிர்பெற்றெழுந்தது உண்மையாகவே நடந்த வரலாற்று நிகழ்ச்சி என கிறித்தவர்களின் நம்புகின்றனர். இது அவர்கள்தம் நம்பிக்கையின் (விசுவாசத்தின்) மையமும் ஆகும்.
இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய விவிலிய குறிப்புகள் பல உள்ளன. அவற்றில் ஒரு சில: யோவான் 19:30-31; மாற்கு 16:1; 16:6. இயேசு இறந்து கல்லறையில் அடக்கப்பட்ட மூன்றாம் நாள் விடியற்காலையில் பெண்கள் சிலர் அவருடைய உடலில் பூசுவதற்கென நறுமணப் பொருட்களைக் கொண்டுசென்ற போது கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டு, கல்லறை வெறுமையாய் இருக்கக் கண்டார்கள் (மத்தேயு 28:1-7; மாற்கு 16:1-8; லூக்கா 24:1-12; யோவான் 20:1-12). சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுந்த இயேசு நாற்பது நாள்கள் தம் சீடருக்குத் தோன்றினார் (திருத்தூதர் பணிகள் 1:3); அதைத் தொடர்ந்து விண்ணேகினார். இதுவே "இயேசுவின் விண்ணேற்றம்" (Ascension of Jesus) என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளைக் கிறித்தவர்கள் உயிர்த்தெழுதல் பெருவிழா (Easter), விண்ணேற்றப் பெருவிழா (Ascension Day) என்னும் திருநாள்களாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.
இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய தொடக்க காலத் திருச்சபையின் நம்பிக்கைத் தொகுப்பு (Creed)
இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார் என்னும் நம்பிக்கை அறிக்கை முதல் முறையாக தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (ஆண்டு 54-55) உள்ளது: "நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறித்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்" (காண்க: 1 கொரிந்தியர் 15:1-3).இயேசுவின் உயிர்த்தெழுதல் கிறித்தவரின் நம்பிக்கைக்கு அடிப்படை
இயேசு கிறித்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்துறந்து, கல்லறையில் அடக்கப்பட்ட பிறகும், சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார் என்பது கிறித்தவர்களின் உறுதியான நம்பிக்கை. எனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலத்தீன நாட்டில் வாழ்ந்து இறந்த இயேசு இன்றும் ஒரு புதிய முறையில் கடவுளோடு இணைந்து உயிர் வாழ்கின்றார் என்பது அவர்கள் கோட்பாடு.திருச்சபையில் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெறுவோர் உயிர்த்தெழுந்த இயேசுவின் புதிய வாழ்வில் பங்குபெற்று, புது மனிதராய் மாறுகிறார்கள் எனவும், இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட அவர்கள் நன்னடத்தையிலும் நன்னெறியிலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் புனித பவுல் அறிவுறுத்துகிறார்: "நீங்கள் கிறித்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சர்ந்தவற்றையே நாடுங்கள்...பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள்" (காண்க: கொலோசையர் 3:1,12).
No comments:
Post a Comment