இந்திய பேனாநண்பர் பேரவை (பதிவு)

வரலாற்று சுவடுகள்

1993 ம் ஆண்டு மார்ச் 12 -ம் தேதி தொடர் குண்டுவெடிப்புகளால் மும்பை மாநகரம் ஓலமிட்டுக் கதறிய வேதனையும், இந்திய இறையாண்மைத் தத்துவத்தில் மனிதநேயம் அரிய பொருளாகிவிடக் கூடதே என்ற எண்ண ஓட்டமும்தான் சரியாக இரு ஆண்டுகளுக்குப்பிறகு அதே நாளில் முகில் கிழித்து எழுந்த முழு மதி போல் இந்திய பேனாநண்பர்கள் பேரவை யின் உதயத்திற்கு காரணமாயின.

அன்பு, நட்பு, மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக் கொண்டு சாதி, சமய, அரசியல் வேறுபாடுகளை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகம் இந்திய பேனாநண்பர்கள் பேரவை துவங்கிய தினம் 12, மார்ச் 1995, நல்ல நண்பர்கள் உருவானால் நல்ல நாடு தானாகவே உருவாகும் என்ற உயரிய நோக்கத்தின் அசுர வளர்ச்சியாய் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், கர்நாடக மாநிலத்திலும், பிரான்ஸ்,சிங்கப்பூர்,சவூதி அரேபியா , துபாய், போன்ற நாடுகளிலும் மனிதநேய மாண்புகளைச் சிறப்பிக்கும் வகையில் பேரவை பரந்து விரிந்து செயல்பட்டு வருகிறது.

மானுட ஏற்ற தாழ்வுகளை மீறியொரு கல்வெட்டாய் விளங்கும் இந்த நட்புப் பாசறை துவங்கிய 12 மார்ச் 'நண்பர்கள் தினம்' என வெகு விமரிசையாக சமூக நல நிகழ்வுகளுடன் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.


கடிதங்கள் மூலம் கருத்துக்களைப் பரிமாறிய நண்பர்கள் நேரில் சந்தித்து நட்பின் உறுதியையும், பெருமையையும் உணர களம் அமைக்க வேண்டும் என்ற எண்ணவிதையின் ஆலவிருட்சமே இன்றும் சிறப்புடன் நடைபெற்றுவரும் நட்புச் சங்கமம்

1996 - தஞ்சை                 1997 - கோலார் தங்கவயல்

1998 - சென்னை               1999 - கரூர்

2000 - செங்கம்                 2001 -புதுக்கோட்டை

2002 -தேனி                    2003 -திருச்சி

2004 -நாகர்கோவில்            2005 - கோபிசெட்டிப்பாளையம்

2006 -மைசூர்                  2007 - காஞ்சிபுரம்

2008 -திருநெல்வேலி           2009 -ஜெயங்கொண்டம்

2010 -சென்னை

என் பதினைந்து நட்புச் சங்கமங்கள் நடத்திய பெருமையான வரலாறு இந்திய பேனாநண்பர்கள் பேரவைக்கு உண்டு.

நட்புச் சங்கம விழாவின் அன்பு, நட்பு, மனிதநேயம், தீண்டாமை ஒழிப்பு , மதநல்லிணக்கம் வலியுறுத்தும் அமைதிப்பேரணி மூலம் மாறுபாடுகளை மறந்து மாண்புடன் வாழும் கலையை கற்பிக்கும் பல்கலைக்கழகமாக பேரவை விளங்குகிறது.

எழுத்தால் இணைந்த இதயங்கள் அன்பு,நட்பு,மனிதநேயச் சிந்தனைகளைக் கடிதங்கள் மூலம் பரிமாறிய நிலையில் பேரவையின் புதிய சகாப்தம் சமூகநல செயல்பாடுகள் என்று வளர்ச்சி பெற்று மராத்திய மாநில அரசு பதிவு சட்டப்படி சமூகநல அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டது.

மனநலம் குன்றியோர் , ஆதரவற்றோர் மற்றும் முதியோர் காப்பகங்களுக்கு மனிதநேய உதவிகள் பேரவையின் சார்பாக தொடர்ந்து வழங்கப்படுகின்றது.

மருந்துகள் ,ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் டானிக்குகள் இலவசமாக வழங்கும் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்கள், மருத்துவத் தேவைக்கான பொருளாதார உதவிகள் போன்ற சேவைகளும் தொடர்கிறது. கண் மருத்துவப் பரிசோதனை முகாம், காது ,மூக்கு ,தொண்டை மருத்துவப் பரிசோதனை முகாம் , புற்றுநோய் விழிப்புணர்ச்சி முகாம் , எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி, கண் தான விழிப்புணர்ச்சி முகாம், இரத்த தான விழிப்புணர்ச்சி முகாம் என மக்களின் தேவைகளை உணர்ந்து ஏராளமான  முகாம்கள் நடத்திய பெருமையையும் பேரவைக்கு உண்டு.

மும்பை மனகரட்சியுடன் இணைந்து 24 மழலையர் வகுப்புகளை பொறுப்பேற்று நடத்துகின்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது, சிறப்பான கல்வி அறிவு பெற்றும் மேற்படிப்பு படிக்க வசதியில்லாத மாணவ,மாணவிகளுக்கு கல்வி செலவை பேரவை ஏற்று கல்வி அளிப்பதும் பேரவையின் கல்விப்பணிக்குச் சான்றாகும்.

சரித்திரச் சாதனையாக நடைபெற்று வரும் நட்புச் சங்கம விழாக்களில் "இதழியல் போராளி" நக்கீரன் ஆர்.ஆர்.கோபால், செவாலியர் வி.ஜி.சந்தோசம், பாவலர் கொ.வீ.நன்னன், பேராசிரியர் த.வணங்காமுடி, 'தன்னம்பிக்கைச் சுடரொளி' க.ஜெயகிருஷ்ணன், காவல்துறை ஆணையாளர் திருமதி.திலகவதி ஐ.பி.எஸ்.,தமிழ்த் தொண்டர் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள்,முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் , சாகித்ய அகாடமி விருதுநகர் பொன்னீலன் , காவல்துறை ஆணையாளர் திரு.பி.தங்கராஜன் ஐ.பி.எஸ்.,வைரமாலை அந்தோணிசாமி, மைசூர் தமிழ் சங்கச் செயலாளர் கு.புகழேந்தி,சிவமுகா தமிழ்ச் சங்கத் தலைவர் சி.தண்டபாணி, காஞ்சி அரிமா இ.ஜீவா , காஞ்சி திரு.எம்.எம்.அண்ணாமலை , மாண்புமிகு முன்னாள் மத்திய உள்துறை இணைஅமைச்சர் திருமதி.வி.ராதிகாசெல்வி, பம்பாய் தென்னிந்திய ஆதிதிராவிட மகாஜன சங்கத் தலைவர் கே.வி.அசோக்குமார், சின்னத்திரை பேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன், திண்டுக்கல் மாவட்ட சமூக சேவகி எஸ்.பி.ஜோதி. ஆகிய சான்றோர் பெருமக்கள், சிறப்பு மலர்களை வெளியிட்டும் பெற்றும் வாழ்த்துரை வழங்கியுள்ளனர் என்பது பேரவையின் வளமான வரலாறு.

பேரவையின் 15 - வது நட்புச் சங்கம பெருவிழா 15.05.2010  சனிக்கிழமை சென்னை அடையாறு இந்திரா நகர் இளைஞர் விடுதி கலையரங்கில் நடைபெற்றது. அமைதிப் பேரணி, புதிய நண்பர்கள் அறிமுகம், பேரவைக் கிளைகள் சார்பான கலைநிகழ்ச்சிகள், ஆதரவற்றோர்-மாற்றுதிறனளிகளுக்கு நலஉதவிகள் வழங்குதல், சிறப்புமலர் வெளியீடு என சங்க விழா நிகழ்வுகள் அமைந்திருந்தன.  15 வது நட்புச் சங்கம சிறப்புமலரை கவிஞர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன்   அவர்கள் வெளியிடவும், வளர்தொழில், தமிழ்கம்யூட்டர் இதழ்களின் ஆசிரியர் தன்னம்பிக்கைச் சுடரொளி க.ஜெயகிருஷ்ணன் அவர்கள் பெற்றும் வாழ்த்துரையும் வழங்கினர்.

நல்ல நட்புநாடும் நண்பர்கள்,கடிதங்கள் மூலம் நட்புணர்வின் நிரந்தரத்தை பதிவு செய்வதில் சோர்வு இன்றி எழுதும் பக்குவம் பெற்ற நண்பர்கள், மனிதநேயப் பணிகளில் எந்தவிதமான சுயலாப நோக்கமும் இன்றி ஈடுபாட்டுடனும், தன்னார்வதுடனும் செயல்பட விரும்பும் நண்பர்களை நட்பு வரலாறு படைக்க அன்புடன் அழைக்கிறோம்.

நட்பு உறவே மானுட உயர்வு