விநாயகர்... ஓங்கார வடிவமாய் ஆனந்த புவனத்தில் சித்தி புத்திகளுடன் நித்யானந்தமாக விளங்குபவர். ஏழை எளியோர்களுக்கு மிகுந்த விருப்பத்துக்கு உரியவர். மஞ்சள் பொடி, களிமண், வெல்லம், சந்தனம், சாணம் இவற்றில்கூட ஒரு பிள்ளையாரைப் பிடித்து பூஜை செய்துவிடலாம். அவரை மகிழ்ச்சியுறச் செய்வதும் எளிது!
அந்த ஆனைமுகப் பெருமானை போற்றி, பூஜிக்கும் திருநாளான விநாயக சதுர்த்தி, ஆண்டுதோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று (சுக்ல பட்ச சதுர்த்தி) உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பார்வதி, பரமேஸ்வரர் ஆகியோரின் பிரார்த்தனைக்கு இணங்க, அவர்களுக்கு புத்திரனாக அவதரித்த நாள், ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தியாகும்.
எளிமையான பூஜையும் இனிய கொண்டாட்டமும்!
இந்த இனிய நாளில், இல்லம் தோறும் களிமண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை, வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம்.
ஆனை முகத்தோனுக்கு விருப்பமான அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி, கடலைப் பருப்பு கொழுக்கட்டை, உளுத்தம் பருப்பு கொழுக்கட்டை, எள்ளு கொழுக்கட்டை, தேங்காய் கொழுக்கட்டை, இட்லி, பாயாசம் என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம்.
அறிவு தெளிந்த ஞானம் முதலியவற்றை அளித்து, எடுத்த செயல்கள் தடைபடா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ அல்லது கடலிலோ விட்டுவிடுவது வழக்கம்.
விக்னங்களுக்கு ராஜாவான விநாயகப் பெருமான், நாம் தொடங்கும் சுப காரியங்களுக்கு, விக்னயம் ஏதும் ஏற்படாமல் அனுகிரஹத்துக் காக்கிறார்.
எனவேதான்...
"ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை போல் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுதுமே!"
என விநாயகப் பெருமானைப் போற்றி, தொன்றுதொட்டு அனைவரும் அவரை முதலில் பூஜித்துக் கொண்டாடி வருகிறோம்.